ஆம்பூர் அருகே நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்; 2 டிரைவர்கள் பலி


ஆம்பூர் அருகே நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்; 2 டிரைவர்கள் பலி
x
தினத்தந்தி 7 Nov 2020 4:29 AM GMT (Updated: 7 Nov 2020 4:29 AM GMT)

ஆம்பூர் அருகே பஞ்சராகி நின்ற லாரி மீது மற்றொரு கன்டெய்னர் லாரி மோதியதில் 2 டிரைவர்கள் பலியானார்கள்.

ஆம்பூர்,

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. அந்த லாரி நேற்று அதிகாலை 6 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் தேசியநெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென டயர் பஞ்சராகி நின்று விட்டது. அப்போது பனிமூட்டம் அதிகமாக இருந்தது.

லாரி ரோட்டிலேயே நின்றதால் அந்த லாரி மீது மற்ற வாகனங்கள் மோதி விடாமல் இருப்பதற்காக டிரைவர் பாலையா (வயது 45) லாரியின் பின்புறம் நின்று டார்ச் லைட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது சென்னை துறைமுகத்தில் இருந்து கர்நாடக பெல்காம் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது.

இந்த லாரி, ஏற்கனவே பழுதாகி நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஞ்சராகி நின்ற லாரி டிரைவர் பாலையா, மோதிய லாரியின் டிரைவர் கோபால் (40) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் பலியான 2 டிரைவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பிரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பனிமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story