மழையில் சரிந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்: இறந்த பிளம்பரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


மழையில் சரிந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்: இறந்த பிளம்பரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 8 Nov 2020 3:30 AM IST (Updated: 8 Nov 2020 6:06 AM IST)
t-max-icont-min-icon

பரப்பாடி அருகே மழையில் சரிந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இறந்த பிளம்பரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இட்டமொழி, 

பரப்பாடி அருகே பாப்பான்குளம் பஞ்சாயத்து காத்தநடப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி மகன் லிங்கத்துரை (வயது 32). பிளம்பரான இவர் கடந்த 5-ந்தேதி இரவில் பரப்பாடி அருகே ஏமன்குளத்தை அடுத்த பொத்தையடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மழையின் காரணமாக சாலையில் சரிந்த மின்கம்பத்தின் மீது மோதியதில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மின்வாரியத்தினர் அலட்சியத்துடன் மின்கம்பத்தை குறைவான ஆழத்தில் நட்டியதால்தான், அது சரிந்ததில் லிங்கத்துரை இறந்ததாக கூறியும், எனவே மின்வாரியத்தினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், லிங்கத்துரையின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, லிங்கத்துரையின் உடலை வாங்க மறுத்து, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் நேற்று முன்தினம் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் நள்ளிரவு வரையிலும் நீடித்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., தாசில்தார் நல்லையா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலிசா ஸ்டெபலா தெரஸ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அ.தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்டவர்கள் மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடமும் கோரிக்கை மனு வழங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை வழங்கவும், லிங்கத்துரையின் மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் பரிந்துரைப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று, லிங்கத்துரையின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து நேற்று காலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் லிங்கத்துரையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.


Next Story