தூத்துக்குடியில், குடிமராமத்து பணிகளை நீர்வள ஆதார அமைப்பு தலைவர் ஆய்வு
தூத்துக்குடியில் குடிமராமத்து பணிகளை நீர்வள ஆதார அமைப்பு தலைவர் சத்யகோபால் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு நீர்வள ஆதார அமைப்பு தாமிரபரணி கோட்டத்தின் மூலம் 9 குளங்கள் ரூ.4.27 கோடி மதிப்பிலும், கோரம்பள்ளம் கோட்டத்தின் மூலம் 3 குளங்கள் ரூ.85 லட்சம் மதிப்பிலும், வைப்பாறு கோட்டத்தின் மூலம் 5 குளங்கள் ரூ.1.82 கோடி மதிப்பிலும் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை தமிழ்நாடு நீர்வள ஆதார அமைப்பு தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் (குடிமராமத்து திட்டம்) சத்யகோபால் ஆய்வு மேற்கொண்டார்.
ஏரல் தாலுகா இருவப்பபுரம் பேய்குளம் பகுதியில் ரூ.52 லட்சம் மதிப்பில் குளம் ஆழப்படுத்துதல், கரை பலப்படுத்துதல், மடை புணரமைப்பு செய்தல் ஆகியவை பேய்குளம் பாசன விவசாய சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளை சத்யகோபால் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து இருவப்பபுரம் பேய்குளம் 5-வது மடை கடைசி பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பில் உபகால்வாய் பகுதியில் தொட்டி பாலம் கட்டப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். அங்கு ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு அளவுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை டேப் மூலம் அளக்குமாறு அறிவுறுத்தி நேரில் பார்வையிட்டார். மேலும் 4-வது மடை தொட்டி பாலம் பகுதியில் ரூ.17.52 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொட்டி பாலத்தை பார்வையிட்டார். ஓடையின் இருபுறங்களிலும் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர்களையும், திட்ட மதிப்பீடு அடிப்படையில் சரியான அளவில் செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, தூத்துக்குடி-நெல்லை மாவட்ட நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர், நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர்கள் அண்ணாத்துரை (தாமிரபரணி கோட்டம்), குருசாமி (வைப்பாறு கோட்டம்), பத்மா (கோரம்பள்ளம் கோட்டம்), ஏரல் தாசில்தார் இசக்கிராஜ், பேய்குளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஞானராஜ், செயலாளர் ஜெயபொன்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story