விஜயாப்புரா அருகே இரட்டை கொலை வழக்கில் 7 பேர் கைது
விஜயாப்புரா அருகே, ரவுடியின் உதவியாளர் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
விஜயாப்புரா,
விஜயாப்புரா தாலுகா பீமாதீரா பகுதியை சேர்ந்தவர் மகாதேவா பைரகொண்டா. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் ஏராளமான போலீஸ் நிலையங்களில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி மதியம் மகாதேவா தனது காரில் விஜயாப்புரா அருகே சென்று கொண்டு இருந்தார். காரில் டிரைவரும், மகாதேவாவின் உதவியாளர் ஒருவரும் இருந்தனர். இந்த நிலையில் எதிரே வந்த ஒரு லாரி, கார் மீது மோதியது.
இதனால் காரில் இருந்து மகாதேவா உள்பட 3 பேரும் கீழே இறங்க முயன்றனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் மகாதேவா உள்பட 3 பேரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் 3 பேரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதனால் 3 பேரும் உயிருக்கு போராடினார்கள். இதையடுத்து அந்த மர்மகும்பல் லாரியில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். உயிருக்கு போராடிய 3 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக விஜயாப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மகாதேவாவின் கார் டிரைவரும், உதவியாளரும் இறந்தனர்.
இதுகுறித்து விஜயாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது ரவுடியான தர்மராஜ் சடசனா என்பவருக்கும், மகாதேவாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும், இதனால் தனது கூட்டாளிகள் மூலம் மகாதேவாவை, தர்மராஜ் தீர்த்துக்கட்ட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தன. அந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக லாரி டிரைவரான சடசனாவை சேர்ந்த நாகப்பா (வயது 28) , விஜயாப்புராவை சேர்ந்த விஜய் தாலிகோட் ஆகிய 2 பேரை விஜயாப்புரா போலீசார் கைது செய்து இருந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் விஜயாப்புரா அருகே அடலட்டி கிராமத்தை சேர்ந்த யாசின் தண்டரகி (25), புல் சோனா (25), சித்தாரய்யா பொம்மனஜோகி (34), சச்சின் மானா (28) , ரவி பூன்தி (20) ஆகிய 5 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 5 குண்டுகள், 4 செல்போன்கள், ஒரு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர்.
மேற்கண்ட தகவலை விஜயாப்புரா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுபம் அகர்வால் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
Related Tags :
Next Story