மழையால் பயிர்கள் பாதிப்பு விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - குமாரசாமி கோரிக்கை
மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கோரிக்கை வைத்துள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்ததால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் கடன் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் 4 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
எனவே இந்த விவகாரத்தில் உடனே அரசு சுதாரித்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தற்கொலையை தடுக்க தொடக்கத்திலேயே அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியது அவசியமாகும். விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தைரியத்தை உண்டாக்கும் பணியில் ஈடுபட வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின் சாபம் அரசுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.
கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இந்த சூழ்நிலையில் விவசாயத்தால் மட்டுமே பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். மாநிலத்தில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்வதற்கு முன்பாகவே, அவர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது மாநிலத்தில் நடந்த விவசாயிகளின் தொடர் தற்கொலை சம்பவங்கள், இனியும் மாநிலத்தில் நடந்து விடக்கூடாது.
எதிர்க்கட்சியின் தலைவராக இருந்தாலும் நான், 500 விவசாயிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வரை நிதி உதவி வழங்கினேன். நான் முதல்-மந்திரியாக இருந்த போது விவசாயிகளின் கடன் தலா ரூ.25 ஆயிரம் வரை தள்ளுபடி செய்தேன். எனவே மழையால் பயிர்கள் சேதம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு மாநில அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story