முல்பாகல் கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளியிடம் பிரச்சினையை கேட்டறிந்த நீதிபதி - பாராட்டுக்கள் குவிகிறது


முல்பாகல் கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளியிடம் பிரச்சினையை கேட்டறிந்த நீதிபதி - பாராட்டுக்கள் குவிகிறது
x
தினத்தந்தி 8 Nov 2020 3:30 AM IST (Updated: 8 Nov 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

முல்பாகல் கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளியிடம் தானாக சென்று பிரச்சினையை கேட்டறிந்த நீதிபதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோலார்,

கோலார் மாவட்டம் முல்பாகல் டவுனை சேர்ந்தவர் தேவராஜாச்சார். இவர் கண் தெரியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே சுற்றுச்சுவர் தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைக்கு அவர் தீர்வு காண்பதற்காக பல்வேறு வழிகளில் முயன்றார். இருப்பினும் தீர்வு காண முடியவில்லை. இதனால் அடிக்கடி தேவராஜாச்சாருக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

மாற்றுத்திறனாளியான அவர் போதிய பணம் இல்லாததால் இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று யோசனை செய்து வந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் முறையிட முடிவு செய்தார்.

அதன்படி நேற்று காலை தேவராஜாச்சார் நடைபயணமாக முல்பாகலில் உள்ள சிவில் கோர்ட்டுக்கு வந்தார். ஆனால் அவர் வக்கீல் மூலம் கோர்ட்டுக்கு சென்றால் பணம் கொடுக்க வேண்டுமே என்ற கவலையில் கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி அறையின் முன்பு தரையில் அமர்ந்திருந்தார்.

இதை அந்த கோர்ட்டின் நீதிபதி ஹாஜி உசேன் ஷாப் யாதவாடா பார்த்தார். அதாவது தேவராஜாச்சார் நீண்ட நேரமாக அங்கே அமர்ந்திருப்பதை கவனித்த நீதிபதி நேராக அவரிடம் சென்று மெல்ல பேச்சுக்கொடுத்தார். அப்போது என்ன பிரச்சினைக்காக இங்கே வந்துள்ளீர்கள் என்று நீதிபதி, தேவராஜச்சாரிடம் கேட்டார்.

அப்போது தனக்கும், பக்கத்துவீட்டினருக்கும் உள்ள சுற்றுச்சுவர் பிரச்சினை பற்றி அவர் நீதிபதியிடம் கூறி, தனக்கு இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி கூறினார். இதை பரிவுடன் கேட்டறிந்த நீதிபதி, இருதரப்பினரிடமும் விசாரித்து சுமுகதீர்வு காணுவதாக அவரிடம் உறுதி அளித்தார். அதைதொடர்ந்து தேவராஜாச்சார் மகிழ்ச்சி ததும்ப அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தற்போது நீதிபதி, கோர்ட்டுக்கு வெளியே மாற்றுத்திறனாளியிடம் குறையை கேட்டு அறிந்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மாற்றுத்திறனாளியுடன் அமர்ந்து குறைகளை கேட்டறிந்த நீதிபதிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Next Story