கரூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் மின்மாற்றியை தாங்கி நிற்கும் பழுதடைந்த கம்பங்கள் - உடனடியாக மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை


கரூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் மின்மாற்றியை தாங்கி நிற்கும் பழுதடைந்த கம்பங்கள் - உடனடியாக மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2020 11:20 AM IST (Updated: 8 Nov 2020 11:20 AM IST)
t-max-icont-min-icon

கரூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் மின்மாற்றியை தாங்கி நிற்கும் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்,

கரூர் சுங்ககேட்டில் இருந்து பழைய திண்டுக்கல் செல்லும் சாலையில் முக்கிய அலுவலகங்களான மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு விருந்தினர் இல்லம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.

மேலும் தாந்தோன்றிமலையில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமணசுவாமி கோவில் உள்ளது. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் சென்று கொண்டே இருக்கும் சாலை ஆகும். பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் இருந்துகொண்டே இருக்கும்.

இந்நிலையில் சுங்ககேட்டில் இருந்து தாந்தோன்றிமலை செல்லும் வழியில் தனியார் பஸ்பாடி கட்டும் நிறுவனம் அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பங்களில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில்உள்ளது.

முக்கியமான சாலை பகுதியில் உள்ள இந்த மின்கம்பங்களினால் பெரும்விபத்து ஏற்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story