ரூ.21 ஆயிரம் லஞ்ச பணம் பறிமுதல்: கறம்பக்குடி சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு - போலீசார் தொடர் விசாரணை


ரூ.21 ஆயிரம் லஞ்ச பணம் பறிமுதல்: கறம்பக்குடி சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு - போலீசார் தொடர் விசாரணை
x
தினத்தந்தி 8 Nov 2020 11:33 AM IST (Updated: 8 Nov 2020 11:33 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியபோது கணக்கில் வராத ரூ.21 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதில் சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிய லஞ்சம் பெறப்படுவதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று முன்தினம் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், தமிழரசி மற்றும் போலீசார் கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள மேஜையில் ரூ.21 ஆயிரம் இருந்ததை கைப்பற்றினர். இந்த பணம் குறித்து சார்பதிவாளர் (பொறுப்பு) பாரதிதாசன் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்தனர். இதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிந்தது. மேலும் அந்த பணம் லஞ்சமாக பெறப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரூ.21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், சார்பதிவாளர் (பொறுப்பு) பாரதிதாசன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story