அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் சங்க மாநாட்டில் தீர்மானம்
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்னார்குடி,
மன்னார்குடி அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் சங்க முதலாவது மாநாடு நேற்று மன்னார்குடியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்க தலைவர் பாப்பையன் தலைமை தாங்கினார். அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட சிறப்பு தலைவர் ரத்தினகுமார், சட்ட ஆலோசகர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சங்க செயலாளர் சுரேஷ் வரவேற்றார். சங்க கொடியை அமைப்புசாரா சங்க மாவட்ட செயலாளர் காந்தி ஏற்றி வைத்தார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காலமுறை ஊதியம்
தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிப்பது. காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் பணியாளர்களை நியமனம் செய்யும் முறையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தற்போது வழங்கி வரும் ஊதியத்தை அதிகரித்து ரூ.18 ஆயிரமாக வழங்க வேண்டும்.
ரூ.5 லட்சம் குடும்ப நிதி
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள் பணிக்காலத்தில் இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் குடும்ப நிதி வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் பண்டிகை அட்வான்ஸ் தொகை ரூ 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.வீரமணி இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய துணை செயலாளர் ராகவன், மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன், மாணவர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story