கோவை ராஜவீதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் சார்- பதிவாளர் சிக்கினார்


கோவை ராஜவீதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் சார்- பதிவாளர் சிக்கினார்
x
தினத்தந்தி 8 Nov 2020 9:26 PM IST (Updated: 8 Nov 2020 9:26 PM IST)
t-max-icont-min-icon

கோவை ராஜவீதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சார் பதிவாளர் சிக்கினார். அங்கிருந்து ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை,

பத்திரப்பதிவு ஆன்லைன் மூலம் நடைபெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனாலும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சப்பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பத்திரப்பதிவு எழுத்தர்கள் மூலம் கோவை ராஜவீதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளருக்காக லஞ்சப்பணம் வசூலிக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பரிமளாதேவி, எழில் அரசி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மதியம் 2 மணிக்கு ராஜவீதி அலுவலகத்தில் அதிரடியாக புகுந்தனர். மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கதவுகளும் மூடப்பட்டன.

ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் பறிமுதல்

அவர்கள், அந்த அலுவலகத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினார்கள். அப்போது முத்திரைத்தாள் எழுத்தர் காளிராஜனிடம் இருந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்- பதிவாளரின் ஏற்பாட்டின்பேரில் நேற்று பதிவான பத்திரப்பதிவுக்கான லஞ்சப்பணம் காளிராஜனிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

சார்- பதிவாளர் கார்த்திகேயனின் காரில் இருந்து ரூ.5 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது. சார்- பதிவாளர் கார்த்திகேயன் மற்றும் காளிராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முத்திரைத்தாள் எழுத்தர் ரவீந்திரன் என்பவர் பத்திரத்தை பதிவு செய்ய சார் -பதிவாளர் கார்த்திகேயனுக்கு ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 500 லஞ்சம் கொடுக்க கொண்டு வந்தார். அந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் மொத்தம் ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டது.

3 பேர் மீது வழக்கு

இது குறித்து லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு கணேஷ் கூறியதாவது:-

டிசம்பர் மாதம்வரை சனிக்கிழமையும் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. ராஜவீதி பத்திரப்பதிவு அலுவலக நிர்வாகத்தின் கீழ் ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட கடைவீதிகள் வருகிறது. எனவே அங்கு அதிக எண்ணிக்கையில் பத்திரப்பதிவு ஆவது வழக்கம். ஆன்லைன் மூலம் பதிவு என்றாலும், சார்- பதிவாளர் அனுமதித்தால் மட்டுமே பத்திரங்கள் பதிவாகும். இதற்காக முத்திரைத்தாள் எழுத்தர் மூலம் லஞசப்பணம் கைமாறுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சார்- பதிவாளர் கார்த்திகேயன், முத்திரைத்தாள் எழுத்தர் காளிராஜன், ரவீந்திரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜவீதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.2¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, சார்- பதிவாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story