மகன் வீட்டில் இருந்து துரத்தியதால் பிச்சைக்காரர் போல் வாழ்க்கை நடத்தும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி - இந்த வாழ்க்கையே மன நிம்மதியை தருவதாக உருக்கம்
மகன் வீட்டில் இருந்து துரத்தியதால் பிச்சைக்காரர் போல் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பழைய பொருட்களை சேகரித்தும், சாலையோரம் படுத்தும் வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த வாழ்க்கையே மனநிம்மதியை தருவதாக அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
தெளிந்த நீரோடையாக இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை சில நேரம் நம்மை சுற்றி இருப்பவர்களாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் கலங்கிய நீரோடையாக மாறிவிடும். செல்வ செழிப்புடன் இருந்தவர் அனைத்தையும் இழந்து வீதிக்கு வந்த கதைகள் பற்றியும் கேள்வி பட்டிருக்கிறோம். அந்த வரிசையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் இன்று பிச்சைக்காரர் போல் வாழ்க்கை நடத்தி வரும் சம்பவம் கர்நாடகத்தில் அரங்கேறியுள்ளது.
அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுன் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர், மதுசூதன் ராவ். போலீஸ் பணியில் பரபரப்பாக இருந்து வந்த அவர் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார். அதன்படி அவர் கடந்த 2011-ம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில் 3 பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மதுசூதன்ராவ், மனைவியுடன் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். பணி ஓய்வூதியத் தொகையாக அவருக்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வுக்கு பிறகு வீட்டில் இருந்து வந்த மதுசூதன்ராவ் மது போதைக்கு அடிமையானார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுசூதனின் மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இந்த துக்கத்தில் மதுசூதன் ராவ் தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவரது மகன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுசூதன் ராவை, அவரது மகன் வீட்டில் இருந்து வெளியே துரத்திவிட்டார்.
இதனால் மனம் உடைந்த மதுசூதன் ராவ் வீட்டுக்கு செல்லாமல், சாலையோரத்தில் படுத்து தூங்கி வந்தார். தற்போது அவர் பழைய பொருட்களை வீதி, வீதியாக தேடிச் சென்று சேகரித்து அதை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். அவரது வங்கி கணக்கில் லட்சக்கணக்கான ரூபாய் இருப்பு உள்ளது. ஆனால் மகன் வீட்டில் இருந்து வெளியேற்றியதால் பிச்சைக்காரர் போல் மதுசூதனன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
அன்று... கம்பீரமாக போலீஸ் சீருடையில் சிந்தாமணி வீதிகளில் ராஜநடை போட்ட மதுசூதன்ராவ் இன்று... குப்பை கழிவுகளை சேகரிக்கும் சாக்கு மூட்டையுடன் கந்தலான சட்டை அணிந்து தாடியுடன் பிச்சைக்காரர் போல் வாழ்க்கை நடத்தி வருகிறார். இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி சிக்பள்ளாப்பூர் போலீஸ் சூப்பிரண்டு ஜி.கே.மிதுன்குமாருக்கு தெரியவந்தது. அவர், மதுசூதன்ராவுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க சிந்தாமணி டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், மதுசூதன் ராவை சந்தித்து தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறியுள்ளனர். ஆனால் எனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்று கூறிய மதுசூதன் ராவ், எனக்கு சொந்தம் என்று யாரும் வேண்டாம். எனக்கு இந்த தெரு வாழ்க்கையே போதும். இதுவே எனக்கு நிம்மதியாக இருக்கிறது. மனநிம்மதிக்காக தான் போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். இந்த வாழ்க்கையே எனக்கு போதும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story