கர்நாடக அரசு பெண் அதிகாரி சுதாவின் தோழி வீட்டில், ரூ.250 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின - 3½ கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல்


கர்நாடக அரசு பெண் அதிகாரி சுதாவின் தோழி வீட்டில், ரூ.250 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின - 3½ கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Nov 2020 5:29 AM IST (Updated: 9 Nov 2020 5:29 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு பெண் அதிகாரியின் தோழி வீட்டில் ஊழல் தடுப்பு படையினர் நடத்திய சோதனையின்போது ரூ.250 கோடி சொத்து ஆவணங்களும், 3½ கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி பொருட்களும் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் கர்நாடக அரசின் உயிரி தொழில்நுட்ப துறையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுதா. இவர் இதற்கு முன்பு பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் நிலம் கையகப்படுத்தும் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அவர் விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு, அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக தெரிகிறது. மேலும் சுதாவின் மீது ஏராளமான ஊழல் புகார்களும் எழுந்தன.

சுதா மீதான ஊழல்கள் குறித்து சமூக ஆர்வலரான ஆபிரகாம் என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின்பேரில் சுதா வீட்டில் சோதனை நடத்த ஊழல் தடுப்பு படைக்கு, லோக் ஆயுக்தா உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் பெங்களூரு கொடிகேஹள்ளியில் உள்ள சுதாவின் வீடு, சாந்திநகரில் உள்ள அலுவலகம் உள்பட 6 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது பல லட்சம் ரூபாய் நகை, பணத்தை ஊழல் தடுப்பு படையினர் எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் எந்த பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றாலும் அதற்கு சுதா லஞ்சம் பெற்று வந்ததாகவும், சுதாவின் தோழியான ரேணுகா என்பவர் சுதாவுக்கு, லஞ்ச பணத்தை வாங்கி கொடுக்கும் ஏஜெண்டு போல செயல்பட்டு வந்ததாகவும், ஊழல் தடுப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி பேடராயனபுராவில் உள்ள சுதாவின் தோழியான ரேணுகா வீட்டில் நேற்று ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ரேணுகாவின் வீட்டில் இருந்து 3½ கிலோ தங்கநகைகள், 7 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.35 லட்சம் ரொக்கம், 40 வங்கிக்கணக்கு புத்தகங்கள், 100 காசோலைகள், ரூ.250 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை ஊழல் தடுப்பு படையினரிடம் சிக்கியதாகவும், அதை அவர்கள் எடுத்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்கநகைகள், வெள்ளி பொருட்கள், சொத்து ஆவணங்கள், பணம் ஆகியவை சுதாவுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது. ரேணுகா வீட்டில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தி கொண்டு இருந்த போது ரேணுகாவின் தந்தை உயிரிழந்து விட்டதாக தகவல் வந்தது.

இதனால் ரேணுகா தனது கணவர் சந்திரசேகருடன் சென்று விட்டார். ஆனாலும் அவரது வீட்டில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது ரேணுகாவின் மகன் வீட்டில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுதாவின் தோழி ரேணுகாவின் கணவர் சந்திரசேகர் ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவார். அவரது மகன் மின்வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரேணுகா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், சுதாவின் சொத்துகளுக்கு அவர் தான் பினாமி என்றும் கூறப்படுகிறது.

Next Story