மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க மறுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிராக கவர்னர் சதி - முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க மறுத்து அரசு பள்ளி மாணவர் களுக்கு எதிராக கவர்னர் சதி செய்துள்ளார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு வசதியாக 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதற்கான கோப்பு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து அது தொடர்பான கோப்பை மத்திய அரசுக்கு கவர்னர் கிரண்பெடி அனுப்பினார்.
இதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்டசபை வளாகத்தில் அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மதியம் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மருத்துவக் கல்லூரிகளில் சேர அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடுக்கு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுவைக்கான இடஒதுக்கீட்டு இடங்கள் அபகரிக்கப்படுவதை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவக் கல்லூரிகளில் சேர நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டதையடுத்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று புதுவை அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு விடாப்பிடியாக இருந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் தேர்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை கருத்தில் கொண்டு நானும், அமைச்சர்களும் கலந்து ஆலோசித்து மருத்துவ கல்லூரிகளில் சேர வசதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் அந்த கோப்புக்கு அனுமதி தர மறுத்து இது கொள்கை சம்பந்தமான விவகாரம் என்று கூறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக மத்திய அரசின் பார்வைக்கு கவர்னர் கிரண்பெடி அனுப்பி உள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் அதிக இடங்கள் கிடைக்க கூடாது என்பதற்காக இது போன்று திட்டமிட்டு சதி செய்துள்ளார்.
தற்போது மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். இதற்கு காலம் இல்லை. எனவே இதுகுறித்து நானும், அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினோம். கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி உள்ளேன். நாளை (இன்று) அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story