தீபாவளிக்கு பிறகு வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகி விடும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு


தீபாவளிக்கு பிறகு வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகி விடும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2020 10:30 PM GMT (Updated: 9 Nov 2020 12:31 AM GMT)

தீபாவளிக்கு பிறகு வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகிவிடும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்கள் வெளியில் கூடுவதாலும், குளிர்காலம் தொடங்க உள்ளதாலும் தொற்று மீண்டும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று சமூகவலைதளங்கள் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றியானார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பொதுமக்களின் உடல்நலம், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக என் மீது கற்கள் எறியப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். வழிபாட்டு தலங்களில் எப்படி கூட்டத்தை தவிர்ப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை எப்படி உறுதி செய்வது என்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம். இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் தீபாவளிக்கு பிறகு தயாராகிவிடும். நாம் பிரார்த்தனையில் ஆழ்ந்து இருப்போம். அது கொரோனா தடுப்பு விதிகளை மீறச்செய்யலாம்.

வழிபாட்டு தலங்களுக்கு சென்ற இடத்தில் கொரோனா பாதித்தவரிடம் இருந்து நமது வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு தொற்று பரவினால் என்ன செய்ய முடியும். வழிபாட்டு தலங்களில் முககவசம் அணிவது கட்டாயமாகும்.

தீபாவளியையொட்டி பொதுமக்கள் பொதுஇடத்தில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். நான் பட்டாசு வெடிக்க தடைவிதிக்க விரும்பவில்லை. ஒருவர் மற்றொருவர் மீது நம்பிக்கை வைப்போம்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு கூடியிருப்பதற்கு அங்குள்ள மாசு தான் காரணம். எனவே மாசை உருவாக்கும் பட்டாசை வெடிப்பதில் இருந்து நாம் நம்மை கட்டுப்படுத்தி கொள்வோம். கொரோனாவுக்கு எதிரான கடந்த 9 மாத கடின உழைப்பை தீபாவளி கொண்டாட்டம் நடக்கும் 4 நாளில் வீணாக்கிவிட வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தீபாவளிக்கு பிறகு வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகி விடும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதன் மூலம் தீபாவளிக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்க வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

Next Story