நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை - விவசாய பணிகள் தீவிரம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நெல்லை சந்திப்பு பகுதியில் லேசான மழை பெய்தது. நேற்று காலையில் வெயில் அடித்தது. மதியம் 1 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. இதனால் நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, பேட்டை, சுத்தமல்லி பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது. சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் பகுதியில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதேபோல் அம்பை, மணிமுத்தாறு, பாபநாசம், கடையம், தென்காசி, ஆழ்வார்குறிச்சி, ஆலங்குளம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. செங்கோட்டை, சிவகிரி, சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் அங்குள்ள தலையணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள தடுப்பணையை தாண்டி தண்ணீர் விழுகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணைக்கு 1,324 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1,404 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 95.86 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.85 அடியாகவும், கடனாநதி அணை 67 அடியாகவும், ராமநதி அணை 65 அடியாகவும், கருப்பாநதி அணை 55.25 அடியாகவும், அடவிநயினார் அணை 101.50 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை நிரம்பி மறுகால் பாய்கிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், அணைகளில் இருந்து தண்ணீர் வருவதாலும் நெல்லை டவுன் குறுக்குத்துறை மற்றும் நெல்லை கால்வாய், பாளையங்கோட்டை கால்வாய் பாசன பகுதிகளிலும், ராமநதி, கடனாநதி பாசன பகுதிகளிலும் விவசாயிகள் நெல் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். டிராக்டர் பவர் டில்லர் மூலம் உழவு அடித்து நாற்று நடும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
அம்பை-8, சேரன்மாதேவி-13, சிவகிரி-9, பாளையங்கோட்டை-6, செங்கோட்டை-6, நெல்லை-4, பாபநாசம்-19, சேர்வலாறு-20, மணிமுத்தாறு-3, கருப்பாநதி-2, குண்டாறு-5, கொடுமுடியாறு-30, அடவிநயினார்-25, நாங்குநேரி-6.
Related Tags :
Next Story