தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் மக்கள் கூட்டம் அலைமோதியது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை,
தீபாவளி பண்டிகை வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் சாப்பிட்டும் கொண்டாடுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், புத்தாடைகள், பட்டாசுகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். நெல்லை டவுன் ரத வீதிகளில் உள்ள ஜவுளி கடைகள், பாத்திர கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், திருடர்களிடம் இருந்து நகை-பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லவும் போலீசார் ஒலிப்பெருக்கிகளில் அறிவுறுத்தினர். பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும் கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை டவுன் ரத வீதிகளில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க 24 கண்காணிப்பு கேமராக்களை போக்குவரத்து போலீசார் பொருத்தியுள்ளனர். டவுனில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து, இந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். சந்தேகப்படும் படியாக நடமாடும் நபர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story