தீபாவளி பண்டிகை பொருட்கள் விற்பனை களை கட்டியது - கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
தீபாவளி பண்டிகை பொருட்கள் விற்பனை களைக்கட்டியது. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை,
தீபாவளி பண்டிகை வருகிற 14-ந்தேதி(சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தியாகராயநகர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை போன்ற முக்கிய பஜார் வீதிகளில் கடந்த சில வாரங்களாக ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மக்களை கவரும் வகையில் ஜவுளிகடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகளில் போட்டிப்போட்டு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருப்பதாலும், பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் நேற்று கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் நேற்று பகலில் மழை பெய்தாலும், மக்கள் பொருட்படுத்தாமல் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். குடைபிடித்தபடியும், ரெயின் கோட்டு அணிந்தும் பலர் பொருட்கள் வாங்க வந்திருந்தனர்.
கொரோனா நோய் தொற்று பீதி காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தவர்களிடமும், தீபாவளி பண்டிகை உற்சாகம் தொற்றிக்கொண்டது. எனவே குடும்பம், குடும்பமாக பலர் ‘ஷாப்பிங்’ செய்வதற்கு வந்திருந்ததை காண முடிந்தது. இதனால் தீபாவளி பண்டிகை பொருட்கள் விற்பனை களைகட்டியது.
ஓட்டல்கள், இனிப்பு கடைகள், ஜூஸ், ஐஸ்கிரீம் கடைகளிலும் விற்பனை படுஜோராக நடந்தது.
தீபாவளி பண்டிகை கால விற்பனை என்பதால் வியாபாரிகளிடமும், மக்களிடமும் பணப்புழக்கம் இருக்கும் என்பதால், மக்கள் போர்வையில் திருடர்கள் நடமாட்டம் இருக்கும். எனவே தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை போன்ற கடைவீதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தியாகராயநகரில் குற்றச்செயல்களை தடுக்கவும், மக்கள் கூட்டத்தை கண்காணிக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் ‘ஷிப்டு’ அடிப்படையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
300-க்கும் மேற்பட்ட சி.சி. டி.வி. கேமராக்கள் மூலம் மக்கள் கூட்டம் கண்காணிக்கப்படுகிறது. 2 ‘டிரோன்’ கேமராக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரங்கநாதன் தெரு முகப்பில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து போலீசார் ஒருவர் பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மக்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துகொள்ளவும், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஒரே இடத்தில் மக்கள் அதிகளவில் கூடுவதால் கடைவீதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி உள்ளனர். எனவே முககவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே கடைவீதிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பெரிய ஜவுளி நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் கொரோனா தடுப்பு விதிமுறை கள் கடைபிடிக்கபட்டன. வாடிக்கையாளர்கள் கையில் சானிடைசர் தெளிக்கப்பட்டன. உடல்வெப்ப பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story