15 சாயத்தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ புகார் அளித்த ஆசிரியர் வீட்டு முன்பு தொழிலாளர்கள் தர்ணா
15 சாயத்தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதை தொடர்ந்து புகார் அளித்த ஆசிரியர் வீட்டின் முன்பு அமர்ந்து தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையில் 50-க்கும் மேற்பட்ட சாயத்தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்தடி நீரை மாசுப்படுத்தி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக மாவட்ட மாசு கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு சில நாட்களுக்கு முன் புகார் கிடைத்தது. இதையடுத்து மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் பொதட்டூர் பேட்டையில் உள்ள சாயத்தொழிற்சாலைகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். முறையான அனுமதி இல்லாமல் இயங்கி வந்த சாயத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் அந்த பகுதி மாசு படுவது தெரியவந்தது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் 15 சாயத்தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தனர். சாயத்தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்ததால் தங்களது வருமானம் தடைபட்டதுடன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக சாயத்தொழிற்சாலை தொழிலாளர்கள் திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம். நரசிம்மனிடம் முறையிட்டனர்.
அவர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தார். இந்த நிலையில் சாயத்தொழிற்சாலைகள் குறித்து மாவட்ட மாசு கட்டுப்பாடு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தது யார்? என்று சாயத்தொழிற்சாலை தொழிலாளர்கள் விசாரித்ததில் பொதட்டூர்பேட்டை இ.எஸ்.டி. நகரில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து சாயத்தொழிற்சாலை தொழிலாளர்கள் நேற்று அவரது வீட்டுக்கு சென்று வீட்டு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் தங்களது வருமானம் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் புகார் கொடுத்த ஆசிரியர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு தாசில்தார் செல்வகுமார் மற்றும் பொதட்டூர்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தர்ணாவில் ஈடுபட்டிருந்த சாயத்தொழிற்சாலை தொழிலாளர்களிடம் தாசில்தார் செல்வகுமார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது சாயத்தொழிற்சாலை தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரிடம் தெரிவித்தனர்.
அவர்களது நிலை குறித்து அரசு உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் செல்வகுமார் அவர்களுக்கு உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டிருந்த சாயத்தொழிற்சாலை தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story