சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ‘மியாவாக்கி ’ முறையில் அடர்ந்த காடுகள் உருவாக்கம் - மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்தார்


சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ‘மியாவாக்கி ’ முறையில் அடர்ந்த காடுகள் உருவாக்கம் - மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Nov 2020 3:30 AM IST (Updated: 9 Nov 2020 6:46 AM IST)
t-max-icont-min-icon

சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ‘மியாவாக்கி’ முறையில் அடர்ந்த காடுகள் உருவாக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

சோழிங்கநல்லூர், 

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் காலியாக உள்ள இடங்கள், நீர்நிலை ஓரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் ‘மியாவாக்கி’ நகர்புற காடுகள் என்ற முறையினை பயன்படுத்தி அடர்த்தியான மரங்கள் அடங்கிய பசுமை நிலபரப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

அதன்படி அடையாறு மண்டலம் கோட்டூர்புரத்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 23 ஆயிரத்து 800 சதுர அடி கொண்ட நிலத்தில் 20 ஆயிரத்து 724 சதுர அடியில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 40 வகையான, 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் வளசரவாக்கம் மண்டலம் ராயலா நகரில் ரூ.8.72 லட்சம் செலவில் 45 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது சோழிங்கநல்லூர் மண்டலம் மாதிரி பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 15 ஆயிரத்து 586 சதுர அடி கொண்ட நிலத்தில் 2,800 மரக்கன்றுகள் நடவு செய்து ‘மியாவாக்கி’ முறையில் அடர்ந்த காடுகள் அமைக்கும் திட்டத்தை நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

இதில் ரோஜா, செம்பருத்தி, குண்டு மல்லி, முல்லை, பவளமல்லி, பாரிஜாதம், இட்லி பூ, நந்தியா வட்டம், அலமோண்டா போன்ற மூலிகை வகைகள், கொடுக்காபுளி, வேம்பு, பூங்கை, நாவல் போன்ற இன்னும் பல வகையான மரவகைகள் கொண்டு அடந்த காடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது தெற்கு வட்டார துணை கமிஷனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story