துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.70½ லட்சம் தங்கம் பறிமுதல் - 6 பேர் கைது
துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய சிறப்பு விமானத்தில் ரூ.70½ லட்சம் தங்கத்தை கடத்தி வந்த 6 பேரை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் தங்கம் அதிகளவில் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அதில் இருந்து வந்து இறங்கிய பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது செரீப் (வயது 39), அஜ்மீர் ஹாஜா (26), நைனா முகமது (53), திருச்சியை சேர்ந்த ஜெகதீஷ் (55), புதுக்கோட்டையை சேர்ந்த சாகுல் அமீது (33), சென்னையை சேர்ந்த முகமது ஆசிப் (23) ஆகிய 6 பேரை சந்தேகத்தின் பேரில் அவர்கள் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, அவர்களை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், அவர்களது கால் சட்டை மற்றும் உள்ளாடைக்குள் பிளாஸ்டிக் டப்பிகளில் மறைத்து வைத்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அந்த வகையில் அவர்கள் 6 பேரிடம் இருந்து ரூ.70 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 312 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story