தொழிலாளியுடன் பேசியதை கண்டித்ததால்: கணவரை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது - பரபரப்பு வாக்குமூலம்


தொழிலாளியுடன் பேசியதை கண்டித்ததால்: கணவரை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது - பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 9 Nov 2020 8:30 AM IST (Updated: 9 Nov 2020 7:07 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே தொழிலாளியுடன் பேசியதை கண்டித்ததால், கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

உப்புக்கோட்டை,

தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்த காமாட்சிபுரம் அருகே உள்ள தனியார் தோட்ட கிணற்றில், 50 வயது உடைய ஆண் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவருடைய உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இறந்த நபரின் தலையில் காயங்கள் இருந்தன. அவர் யார்? என்பது குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது இறந்தவர், கடமலைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்த சமையல் தொழிலாளியான முத்துக்காளை (வயது 42) என்றும், அவரை யாரோ கொலை செய்து கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.

இதுகுறித்து அவருடைய மனைவி கலையரசியிடம் போலீசார் விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் தனது கணவரை, கட்டிடத்தொழிலாளி மற்றும் அவருடைய கூட்டாளியுடன் சேர்ந்து கலையரசி தீர்த்து கட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து கலையரசியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தில் கலையரசி கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்ததாவது:-

என்னுடைய கணவர் முத்துக்காளை, சமையல் வேலைக்கு கேரளாவுக்கு சென்றுவிட்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வருவார். எங்களுக்கு கிஷோர்குமார் (14), ஹரீஷ்குமார் (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். நான் மேலப்பட்டியை சேர்ந்த சேதுபதி (37) என்பவரிடம் கட்டிட வேலைக்கு சென்று வந்தேன். அதில் எங்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.

இது, எனது கணவருக்கு தெரிந்ததால் என்னை கண்டித்தார். பின்னர் வீரபாண்டி அருகே உள்ள என்னுடைய பெற்றோர் வீட்டில் சில நாட்கள் குடும்பத்துடன் இருந்தோம். அதன்பிறகும் சேதுபதியுடன் மீண்டும் நான் பேசியதை என்னுடைய கணவர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், சேதுபதியுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

இதற்காக அவரை கடந்த 4-ந்தேதி மேலப்பட்டிக்கு செல்வோம் என்று கூறி அழைத்து சென்றேன். அப்போது செல்லும் வழியில் காமாட்சிபுரம் அருகேயுள்ள தனியார் தோட்ட கிணற்று பகுதியில் இயற்கை உபாதை கழிக்க நான் சென்றேன். அங்கு ஏற்கனவே சேதுபதியும், அவருடைய நண்பர் கணேசனும் காத்திருந்தனர். அவர்கள் எனது கணவரை கம்பியால் தலையில் அடித்து கொலை செய்தனர்.

அதன்பின்பு நாங்கள் 3 பேரும் சேர்ந்து அவருடைய உடலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் வீசினோம். பின்னர் என்னுடைய பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டேன். முத்துக்காளையின் அண்ணன் ஈஸ்வரன் என்னிடம் கணவரை பற்றி கேட்டார். அவரை காணவில்லை என்று கூறி நாடகமாடினேன். அதன்பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன். இவ்வாறு தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

கலையரசி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சேதுபதியையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான கணேசனை பிடிக்க, வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையிலான தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தாலி கட்டிய கணவரை, மனைவியே கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் வீரபாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story