விருத்தாசலம் சிறையில் கைதி சாவு: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்


விருத்தாசலம் சிறையில் கைதி சாவு: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்
x
தினத்தந்தி 9 Nov 2020 7:48 AM IST (Updated: 9 Nov 2020 7:48 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது விசாரணையை தொடங்கி உள்ளார்கள்.

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). இவர் முந்திரி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பிரேமா(34). 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நெய்வேலி வடக்குத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 30-ந்தேதி நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், திருட்டு வழக்கு தொடர்பாக செல்வமுருகனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கடந்த 4-ந்தேதி இரவு உடல் நிலை பாதிக்கப்பட்டு, செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெய்வேலி போலீசார் அடித்து துன்புறுத்தியதில்தான் செல்வமுருகன் உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கு காரணமான போலீசாரை கைதுசெய்தால் தான் உடலை வாங்குவோம் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாத்தான்குளம் சம்பவம் போல் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் கைதியின் இறப்பு குறித்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஆனந்த் நேற்று முன்தினம் 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினார். இந்த சூழ்நிலையில் செல்வமுருகன் இறப்பு தொடர்பாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினார்கள்.

கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக வந்தனர். அவர்கள் வந்திருந்த நேரத்தில் விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஆனந்த் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்தார்.

இதையடுத்து மாஜிஸ்திரேட்டு விசாரணை முடிந்த பிறகு, தங்களது விசாரணையை தொடங்குவதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு ஆனந்த் போலீஸ் நிலையத்தில் பணி செய்தவர்களிடம் விசாரித்தார். அவரது விசாரணை 6 மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது.

இதற்கிடையே நெய்வேலியில் இருந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விருத்தாசலம் கிளை சிறைச்சாலைக்கு சென்றனர். அங்கு சிறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அங்கிருந்த கைதிகளிடம் செல்வமுருகன் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் செல்வமுருகனின் குடும்பத்தினரிடமும் அவர்கள் விசாரித்தனர். கிளை சிறைச்சாலையில் கைதி உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தொடங்கிய வேகத்திலேயே தீவிரப்படுத்தி இருப்பது விருத்தாசலம், நெய்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரை, நாளை(அதாவது இன்று) கடலூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

Next Story