பர்கூர் மலைப்பகுதியில் பரிதாபம் கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் பலி - 11 பேர் படுகாயம்


பர்கூர் மலைப்பகுதியில் பரிதாபம் கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் பலி - 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Nov 2020 9:12 AM IST (Updated: 9 Nov 2020 9:12 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் மலைப்பகுதியில் கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

அந்தியூர்,

அந்தியூரை அடுத்த பர்கூர் மலையின் மேற்கு பகுதியில் உள்ள மலைக்கிராமம் தம்முரெட்டி. இங்குள்ளவர்கள் பெரும்பாலானோர் விவசாய கூலித்தொழிலாளர் கள் ஆவர்.

எனவே இந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு விவசாய வேலைக்காக காலையில் சென்றுவிட்டு மாலையில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி விடுவார்கள். பர்கூர் மலைப்பகுதியில் முறையான போக்குவரத்து வசதி இல்லாததால், கார், சரக்கு வாகனம் உள்பட ஏதாவது ஒரு வாகனத்தில் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் தம்முரெட்டி மலைக்கிராமத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்களான சிக்கப்பன் (வயது 40), தேவராஜ் (45), தொட்டப்பி (35), ஜோகன் (35), ஜோகி (45), போலன் (45), சித்தலிங்கம் (45) உள்பட 14 பேர் அந்தியூரை அடுத்த வட்டக்காடு பகுதிக்கு விவசாய வேலைக்காக புறப்பட்டனர். இதற்காக தம்முரெட்டியை சேர்ந்த மாதேவன் (42) என்பவரின் காரில் வட்டக்காடுக்கு சென்றனர். காரை மாதேவன் ஓட்டினார்.

பர்கூரை அடுத்த மணியாச்சி பள்ளம் அருகே ஒரு கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திரும்ப முடியாமல் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய கார் ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சிக்கப்பன், தேவராஜ், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். டிரைவர் மாதேவன் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அங்கு ரோந்து வந்த வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போனவர்களின் உடல்களை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி கவிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், அந்தியூர் தாசில்தார் மாரிமுத்து, பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்து குறித்து கேட்டறிந்தனர். பின்னர் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே கார் டிரைவர் மாதேவன், சித்தலிங்கம் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். விவசாய வேலைக்கு சென்ற தொழிலாளர்களில் 4 பேர் விபத்தில் இறந்த சம்பவத்தால் தம்முரெட்டி கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

Next Story