வேட்டவலத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 பேர் பலி - துக்கநிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் பரிதாபம்


வேட்டவலத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 பேர் பலி - துக்கநிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் பரிதாபம்
x
தினத்தந்தி 9 Nov 2020 11:10 AM IST (Updated: 9 Nov 2020 11:10 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து வேட்டவலத்துக்கு துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் கல் குவாரி குட்டையில் நீச்சல் பழக சென்ற 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

வேட்டவலம்,

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பாரதி தெருவை சேர்ந்தவர் கணேஷ். இவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து சுமார் 15 பேர் வேட்டவலத்துக்கு வந்தனர். அவர்களில் சுமார் 10 பேர் நேற்று காலை 10 மணியளவில் வேட்டவலம் பெரியார் தெரு அருகே உள்ள கல்குவாரி குட்டை அருகே இயற்கை உபாதைக்காக சென்றனர்.

அப்போது பெங்களூருவை சேர்ந்த சுரேஷ் (வயது 48) என்பவர் அவரது அண்ணன் மகேஷ் என்பவரின் மகள் ஹரிணிக்கு (14) நீச்சல் கற்றுக் கொடுப்பதாக கூறி அருகிலிருந்த கல்குவாரி குட்டைக்கு அழைத்து சென்றார். அங்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கல்குவாரி குட்டைக்கு சென்று பார்த்தனர். அப்போது சுரேஷ், ஹரிணி ஆகிய இருவரும் குட்டையில் மூழ்கியது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அதுகுறித்து வேட்டவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பரசுராமன், மாயன் (போக்குவரத்து) ஆகியோரின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் குவாரிக்குள் இறங்கி சுரேஷ், ஹரிணி ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்குவாரி குட்டையில் இருந்து இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

பின்னர் வேட்டவலம் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் 2 பேர் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story