விழுப்புரம் அருகே இடிந்து விழும் அபாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க - கிராம மக்கள் கோரிக்கை


விழுப்புரம் அருகே இடிந்து விழும் அபாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க - கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2020 11:41 AM IST (Updated: 9 Nov 2020 11:41 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே இடிந்து விழும் அபாயத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்திற்குட்பட்டது கொத்தமங்கலம் கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக அதே கிராமத்தில் முருகன் கோவிலுக்கு அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் அப்பகுதி மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இக்கிராமத்தில் வேறு குடிநீர் தொட்டி எதுவும் கிடையாது. இருக்கின்ற ஒரேயொரு தொட்டியின் மூலம் தடையின்றி கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குடிநீர் தொட்டியை புனரமைப்பு செய்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் தற்போது இந்த தொட்டி மிகவும் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.

குறிப்பாக தொட்டிக்கு தண்ணீர் ஏற்றக்கூடிய குழாய்களில் ஒரு குழாய் உடைந்துள்ளதால் அதிலிருந்து குடிநீர் வீணாகி செல்கிறது. இதனால் தொட்டியில் ஏற்றப்படும் தண்ணீரில் பாதியளவு தண்ணீர் இப்படியே தினந்தோறும் வீணாகி வருகிறது. அதுமட்டுமின்றி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் 4 பக்க தூண்களும் உடைந்து சேதமடைந்துள்ளதால் அது வலுவிழந்த நிலையில் உள்ளது. இதனால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

அவ்வாறு இந்த குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்படுவதோடு மட்டுமின்றி அக்கிராம மக்களுக்கு குடிநீர் பிரச்சினையும் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதில் உடனடியாக தலையிட்டு இந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய குடிநீர் தொட்டியை கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story