அர்னாப் கோஸ்வாமியை குடும்பத்தினர் சந்திக்க அனுமதியுங்கள்: கவர்னர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த மந்திரி அனில் தேஷ்முக்
சிறையில் அர்னாப் கோஸ்வாமியை அவர்களது குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்குமாறு கவர்னர் விடுத்த கோரிக்கையை மந்திரி அனில் தேஷ்முக் நிராகரித்தார்.
மும்பை,
அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆங்கில டி.வி. சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
இந்தநிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் அர்னாப்பின் உடல்நலம், பாதுகாப்பில் கவனமாக இருக்க மந்திரியிடம் அறிவுறுத்தினார். மேலும் அர்னாப்பை அவரது குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்குமாறும் மந்திரியிடம் கவர்னர் கேட்டு கொண்டார்.
நிராகரிப்பு
ஆனால் கவர்னரின் இந்த கோரிக்கையை உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் ஏற்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னை மதிப்பிற்குரிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி போனில் தொடர்புகொண்டார். அவர் என்னிடம் நீதிமன்ற காவலில் உள்ள அர்னாப் கோஸ்வாமியை, அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்கும்படி கோரிக்கை வைத்தார்.
ஆனால் தற்போது கொரோனா நோய் தொற்று பரவி வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்த ஆட்கொல்லி வைரசின் அச்சம் காரணமாக கடந்த 4 மாதங்களாக எந்த கைதியையும் அவர்களின் உறவினர்கள் சந்திக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. வக்கீல்கள் கூட கைதிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சம்பந்தபட்டவர்கள் அதிகாரிகள் அனுமதியுடன் அர்னாப் கோஸ்வாமியை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story