கொரோனா ஊரடங்கு காலத்தில் வாடகை கொடுக்காததால் தகராறு வீட்டு உரிமையாளர்- வாடகைதாரர் கட்டிப்புரண்டு சண்டை


கொரோனா ஊரடங்கு காலத்தில் வாடகை கொடுக்காததால் தகராறு வீட்டு உரிமையாளர்- வாடகைதாரர் கட்டிப்புரண்டு சண்டை
x

பெங்களூருவில், கொரோனா ஊரடங்கு காலத்தில் வாடகை கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் வீட்டு உரிமையாளரும், வாடகைதாரரும் குடுமிப்பிடி சண்டை போட்டு கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

பெங்களூரு,

பெங்களூரு ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எச்.எம்.டி. லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சையது இம்தியாஸ். இவருக்கு சொந்தமான வீட்டில் முகமது என்பவர் வாடகைக்கு இருந்து வருகிறார். முகமது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் மாதம், மாதம் சையது இம்தியாசுக்கு சரியாக வாடகை கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு இருந்த கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை முகமது வேலைக்கு செல்லவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர் வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு செய்த பின்னர் வழக்கம்போல முகமது வேலைக்கு சென்று உள்ளார். ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் பாக்கி வைத்த வாடகை பணத்தை அவர் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. வாடகை பணத்தை தரும்படி முகமதுவிடம், சையது இம்தியாஸ் அடிக்கடி கேட்டு வந்து உள்ளார்.

மோதல்-வீடியோ வைரல்

இந்த நிலையில் நேற்று முகமது வீட்டிற்கு சென்ற சையது இம்தியாஸ் பாக்கி வைத்த வாடகை பணத்தை தரும்படி கேட்டு உள்ளார். ஆனால் வாடகை பணத்தை கொடுக்க முகமது மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த சையது இம்தியாஸ் வீட்டை காலி செய்துவிடும்படி முகமதுவிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முகமது, சையது இம்தியாசிடம் தகராறு செய்தார். இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும் கீழே விழுந்து கட்டிபுரண்டு குடுமிப்பிடி சண்டையும் போட்டனர். இந்த காட்சிகளை யாரோ ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

இதற்கிடையே மோதல் சம்பவம் குறித்து முகமதுவும், சையது இம்தியாசும் ஆர்.டி.நகர் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அந்த புகார்களின்பேரில் 2 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story