சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்து: புதிய மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சாவு
பாளையங்கோட்டையில் புதிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை,
நெல்லை அருகே பாளையங்கோட்டை மகாராஜா நகரைச் சேர்ந்தவர் விக்டர். இவருடைய மகன் சால்வியஸ் ஜெஸ் (வயது 25). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை புதிதாக வாங்கிய சால்வியஸ் ஜெஸ் அதில் தன்னுடைய நண்பர்கள், உறவினர்களை பார்ப்பதற்காக சென்று வந்தார்.
நேற்று மாலையில் சால்வியஸ் ஜெஸ் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அவர் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி நாற்கர சாலையில் சென்று கொண்டிருந்தார்.
பரிதாப சாவு
அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி நாற்கரசாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் நாற்கரசாலையின் நடுவில் செடிகள் உள்ள பகுதியில் தூக்கி வீசப்பட்ட சால்வியஸ் ஜெஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று, சால்வியஸ் ஜெஸ்சின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story