நெல்லையில் அறிவியல் மையம், அருங்காட்சியகம் இன்று திறப்பு பார்வையாளர்கள் முககவசம் அணிந்து வர அறிவுறுத்தல்
நெல்லையில் 7 மாத இடைவெளிக்கு பிறகு மாவட்ட அறிவியல் மையம், அருங்காட்சியகம் ஆகியவை இன்று(செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. பார்வையாளர்கள் முககவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை,
கொரோனா தொற்று நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவியல் மையங்கள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், பள்ளிக்கூடங்கள், விளையாட்டு விடுதிகள், பொழுதுபோக்கு கூடங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
தற்போது நோய் தொற்று குறைந்து உள்ளதை தொடர்ந்து அறிவியல் மையங்கள், அருங்காட்சியங்கள் ஆகியவற்றை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அறிவியல் மையம்
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள மாவட்ட அறிவியல் மையம் 7 மாதங்களுக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. இங்கு அறிவியல் காட்சி அரங்குகள், கூட்டரங்கு, கணினி ஆய்வுக்கூடம், 3 டி ஷோ அரங்கு, டைனோசர் பூங்கா மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவை உள்ளன.
இதேபோல் பாளையங்கோட்டையில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. அங்கு டைனோசர் பூங்கா மற்றும் பழங்கால ஓவியங்கள், கற்சிலைகள் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகமும் நோய்த்தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களாக திறக்கப்படாமல் மூடிக்கிடந்தது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு அருங்காட்சியமும் திறக்கப்படுகிறது.
முககவசம்
இதுகுறித்து அருங்காட்சியக காப்பாளர் சிவசத்தியவள்ளி கூறுகையில், ‘அருங்காட்சியம் திறக்கப்படுகிறது. இங்கு வருகின்ற பார்வையாளர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்’ என்றார்.
இதேபோல் மாவட்ட அறிவியல் மைய அலுவலர் குமார் கூறுகையில், ‘மாவட்ட அறிவியல் மையத்தில் முதல் கட்டமாக பூங்கா காட்சிக்கூடம் திறக்கப்படும். பார்வையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். கை கழுவ வசதியாக ஹேண்ட் சானிடைசர் காலால் இயக்கும் கருவி அமைக்கப்பட்டு உள்ளது. டிக்கெட் எடுத்து வரும் ஒவ்வொருவருக்கும் கையுறை வழங்கப்படும். காட்சிக்கூடத்தில் கருவிகளை தொட்டு இயக்குவதை தவிர்க்க சென்சார் முறை அமைக்கப்பட்டு உள்ளது. கையை காட்டினால் இயங்கும் விதத்தில் கருவிகள் மாற்றப்பட்டு உள்ளன. 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களும், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களும் வரவேண்டாம்’ என்றார்.
Related Tags :
Next Story