பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜாவை கைது செய்ய கோரி மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு
பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜாவை கைது செய்யக்கோரி தஞ்சை கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கலெக்டர் கோவிந்தராவிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.3 ஆயிரத்துக்கும் மேலாக வழங்கப்பட்டு வரும், முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகத்திலும் இந்த உதவித்தொகையை குறைந்தபட்சம் 3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
தனியார் துறை பணிகளிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 55 சதவீத இடங்களை உத்தரவாதப்படுத்த தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றவேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக அறிவித்து நிரப்பப்படவில்லை. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்தைக் குலைக்கும் விதத்தில் இழிவுபடுத்தும் வகையிலும் பொதுவெளியில் பா.ஜ.க. தலைவர்கள் பேசுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா தமிழக அரசை தாக்குவதற்கு மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் விதத்திலான ஆடியோவை நேற்று முன்தினம் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது அவருடைய பேச்சு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அவரின் இந்த பேச்சுக்கு இதுவரை அவர் மறுப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை. எனவே அவரை கைது செய்ய வேண்டும். மேலும் அவரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story