கொரோனா சமூக தொற்றாக பரவி விடும் பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு
வருகிற 16-ந் தேதி பள்ளிகளை திறந்தால் கொரோனா சமூக தொற்றாக பரவிவிடும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.
திருச்சி,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்பொருட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால் தமிழகத்தில் வருகிற 16-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராததால் பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இதனையடுத்து, 16-ந் தேதி பள்ளி திறப்பு குறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 538 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு பள்ளியிலும் அதன் தலைமை ஆசிரியர்கள் இந்த கூட்டத்தை நடத்தினார்கள். இதில் பங்கேற்பதற்காக வந்த பெற்றோர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவிமூலம் முதலில் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் கை கழுவும் திரவம் மூலம் கைகளை நன்றாக கழுவ அறிவுறுத்தப்பட்டது. பின்னர் சமூக இடைவெளியை பின்பற்றி பெஞ்சுகளில் அமர வைக்கப்பட்டனர்.
அப்போது அவர்களுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டது. அந்த படிவத்தில் மாணவரின் பெயர், பயிலும் வகுப்பு, பாடப்பிரிவு, பெற்றோரின் பெயர், ஊர், செல்போன் எண் ஆகியவற்றை நிரப்பும் படி கேட்கப்பட்டிருந்தது. மேலும் 16-ந் தேதி முதல் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளை திறக்க சம்மதம், சம்மதம் இல்லை என இரண்டு கட்டங்கள் குறிப்பிடப்பட்டு அவற்றில் ‘டிக்’ செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. சம்மதம் இல்லை என்றால் அதற்கான காரணத்தை எழுதுவதற்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
திருச்சி பெரிய மிளகுபாறையிலுள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் பெற்றோர்களுடன் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் வந்திருந்தனர். கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளிகளை திறக்க சம்மதமில்லை என்று படிவத்தில் எழுதிக் கொடுத்தனர். அவர்கள் எழுதிக்கொடுத்த படிவங்களை அப்பள்ளியின் தலைமை ஆசிரியை வளர்மதி பெற்றுக்கொண்டார். காலையில் தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்த திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த வள்ளி என்பவர் கூறியதாவது:-
நாங்கள் சலவைத்தொழில் செய்து வருகிறோம். எனது மகள் இந்த பள்ளியில் 12-ம் வகுப்பும், மகன் 11-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். எனது கணவர் இதய நோயாளி. கொரோனா ஊரடங்கால் நாங்கள் மிகவும் பாதித்து விட்டோம். கொரோனா இன்னும் முழுமையாக ஒழியவில்லை. இந்த சூழலில் பள்ளியை திறந்தால் நோய் பரவி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பிள்ளைகள் மூலம் எங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் வைத்தியம் பார்ப்பதற்கு கூட எங்களிடம் பண வசதி கிடையாது. அதனால் இப்போது பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பெரிய மிளகுபாறையை சேர்ந்த ராதா என்ற பெண் கூறும்போது, ‘எனது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். தமிழக அரசு கொரோனா முற்றிலுமாக ஒழிந்து விட்டது என இன்னும் அறிவிக்கவில்லை. மேலும் தடுப்பு மருந்தும் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. தடுப்பு ஊசி போடப்பட்ட பின்னர் தான் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும், இல்லை என்றால் மாணவர்கள் ஒன்று சேரும் இடத்தின் மூலம் சமூக பரவலாக மாறிவிடும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிகளை இப்போதைக்கு திறக்க கூடாது’ என்றார்.
பரிமளா என்ற பெண் கூறுகையில், ‘தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் என ஏற்கனவே விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில் பள்ளிகளை திறந்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது’ என்றார்.
அருண் என்பவர் கூறுகையில், ‘இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பள்ளிகளை மூடி வைத்திருப்பது? என்னதான் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டாலும், நேரடியாக படித்தால்தான் மாணவர்கள் புரிந்து படிக்கவும், சந்தேகங்களை ஆசிரியர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே, அரசு அறிவித்தபடி வருகிற 16-ந் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும்’ என்றார்.
சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் மற்றும் புறத்தாக்குடியில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கருத்தை அறிய இருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் தலைமையிலும், அந்தந்த பள்ளிகளின் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர், பள்ளி தாளாளர் ஆகியோர் முன்னிலையிலும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
அப்போது, மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளைத் திறக்கலாம் என்று ஒரு தரப்பு பெற்றோரும், பள்ளிகளை திறந்தால் வைரஸ் பரவும் என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story