ஜெயலலிதாவின் மரணத்தை போலவே அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் - மு.க.ஸ்டாலின் பேச்சு
ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே, அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்திலும் மர்மம் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
மதுரை,
மதுரையில் தி.மு.க. சார்பில், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் நடந்த சிறப்பு பொதுக்கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்து, பேசியதாவது:-
மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் இரண்டு அரசுகளுமே தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து அநீதியை இழைத்து வருகின்றன. இது சரியா, முறையா, தர்மம்தானா என்பதைக் கேட்பதற்கான பொதுக்கூட்டம்தான் இந்த மதுரை பொதுக்கூட்டம். நீதி கேட்கும் கூட்டம். கடந்த அக்டோபர் 30-ந்தேதி, நான் மதுரை வந்தேன்.
கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் அதிகமாக வெளியூர் பயணங்கள் செய்ய இயலாத நிலையில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பசும்பொன் செல்வதற்காக மதுரை வந்தேன். சாதியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும் அதை பற்றி பெருமையாக பேசுவதால் எதுவும் ஆகப்போவதில்லை. அந்த சாதியை மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாம் என்ன உதவிகள் செய்தோம், எத்தகைய உரிமைகளை பெற்றுத்தந்தோம், அவர்களது உயர்வுக்காக என்ன பணிகளை ஆற்றினோம் என்பதுதான் முக்கியமானது.
அந்த வரிசையில் அனைத்து சாதியினர், மதத்தினர் உள்ளடக்கிய தமிழ்ச்சமூகத்தின் உயர்வுக்கும் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான் தி.மு.க. உருவாக்கப்பட்டது. அதனுடைய ஆட்சி என்பது அனைத்துத் தமிழர்களது மேன்மைக்கான ஆட்சியாகவே அமைந்தும் வருகிறது. நாளை மலர இருக்கிற தி.மு.க. ஆட்சியும் அனைத்து தமிழ் மக்களின் அரசாகத்தான் இருக்கும்.
மாநில சுயாட்சிக்காக எடப்பாடி பழனிசாமி வாதாடுவார் என்றோ, இந்தி திணிப்பை எதிர்ப்பார் என்றோ, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தருவார் என்றோ, புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பார் என்றோ, குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பார் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை.
இது எதையும் செய்ய மாட்டார். ஆனால் நான் எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை, மதுரையில் அமையும் என்று சொல்லப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட உங்களால் வர வைக்க முடியாதா என்பதுதான் என்னுடைய ஒரே கேள்வி. அடிக்கல் நாட்டிய இடத்தில் அதற்குரிய தடம் கூட இல்லை. அடிக்கல் நாட்டியதைப் போல படம் காட்டினார்களே தவிர அடிக்கல் நாட்டவில்லை.
நிதி ஒதுக்காத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களை மட்டும் நியமித்துவிட்டார்கள். அதிலும் மதுரை மக்கள் பிரதிநிதிகளுக்கு இடமில்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்பதற்கு ஒரே உதாரணம் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை.
ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே, துரைக்கண்ணுவின் மரணத்திலும் மர்மம் உள்ளது. துரைக்கண்ணு எந்த தேதியில் மரணம் அடைந்தார் என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. அவர் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று நானே எனது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தேன். ஆனால் அ.தி.மு.க.வினர், துரைக்கண்ணுவின் உடலை வைத்து ஊழல் நாடகம் ஆடி இருக்கிறார்கள்.
நீங்கள் எத்தனை கோடி பணம் எடுத்து வந்தாலும் தி.மு.க.வை வெல்ல முடியாது. தி.மு.க. மக்களின் மனங்களை வென்ற இயக்கம். மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால், அ.தி.மு.க.வின் பகல்கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும். வட்டியும் முதலுமாக, கூட்டு வட்டியையும் சேர்த்து, சட்டம் தன் கடமையைச் செய்யும்; அதன் கரங்கள் வேண்டுமளவுக்கு நீளும். இந்தக் கோட்டையை மீட்கும் ஜனநாயகப் போர் தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தல். தமிழ்நாட்டின் மானம் காக்க அனைவரும் மருதுபாண்டியர்களாக எழுங்கள். கண்ணகியாக எழுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story