20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் - விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட 13 பணிமனைகளில் நடந்தது


20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் - விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட 13 பணிமனைகளில் நடந்தது
x
தினத்தந்தி 10 Nov 2020 3:45 AM IST (Updated: 10 Nov 2020 9:03 AM IST)
t-max-icont-min-icon

20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கக்கோரி விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட 13 பணிமனைகளில் அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இதுவரை 20 சதவீதம் தீபாவளி போனஸ் தொகையை பெற்று வந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு தொழிற்சங்கங்களை கலந்து பேசாமல் தன்னிச்சையாக, கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி போனஸ் தொகை 10 சதவீதம் குறைத்து வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை கண்டித்தும் தொழிற்சங்க தலைவர்களை அழைத்துபேசி 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும், 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அனைத்து பணிமனைகள் முன்பும் போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி கண்டன உரையாற்றினார். இதில் சி.ஐ.டி.யு. தலைவர் மூர்த்தி, பொதுச்செயலாளர் ரகோத்தமன், நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் மணி, தொ.மு.ச. பொருளாளர் ஜான்போஸ்கோ, ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் முருகானந்தம், மறுமலர்ச்சி தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன், அறிவர் அம்பேத்கர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் கணேசன், தொ.மு.ச. துணைத்தலைவர்கள் சந்திரசேகர், பெருமாள், ராஜேந்திரன், மனோகரன், அமைப்பு செயலாளர் வேலு, பிரசார செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பணிமனை செயலாளர்கள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அரசு போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படாததால் அவர்கள் அனைவரும் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது. இதுகுறித்து போராட்டக்குழுவினர் கூறுகையில், எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காணும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றனர்.

இதேபோல் விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம் பணிமனை எண் 1, 2, 3 மற்றும் செஞ்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி பணிமனை எண் 1, 2, சங்கராபுரம், சின்னசேலம், புதுச்சேரி, கோயம்பேடு ஆகிய 13 பணிமனைகளிலும் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story