16-ந் தேதி பள்ளிகளை திறக்கலாமா? மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டம் - முதன்மைக்கல்வி அதிகாரி ராமன் பங்கேற்பு


16-ந் தேதி பள்ளிகளை திறக்கலாமா? மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டம் - முதன்மைக்கல்வி அதிகாரி ராமன் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Nov 2020 6:30 AM GMT (Updated: 10 Nov 2020 6:14 AM GMT)

வருகிற 16-ந் தேதி முதல் பள்ளிகளை திறப்பது தொடர்பாக குமரி மாவட்டத்தில் உள்ள 483 பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் முதன்மைக் கல்வி அதிகாரி ராமனும் கலந்து கொண்டார்.

நாகர்கோவில், 

கொரோனா தொற்று பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் நடத்தப்படவில்லை. நடப்பு கல்வி ஆண்டிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மாணவ- மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதாலும், கொரோனா தொற்று சற்று குறைந்திருப்பதாலும் பள்ளி, கல்லூரிகளை வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்கவும், முதல் கட்டமாக 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களை மட்டும் பள்ளிக்கு வரவழைப்பது என்றும் முடிவு செய்து கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மேலும் பள்ளிகளை திறப்பது தொடர்பாக மாணவ- மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது.

இதேபோல் குமரி மாவட்டத்திலும் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடந்தன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 483 பள்ளிகளில் இந்த கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றன.

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு உயர்நிலைப்பள்ளி, எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, கவிமணி மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் கூட்டம் நடந்தது. எஸ்.எல்.பி. அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர் தரப்பில் பெண்கள் அதிகமாக கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கை கழுவ சோப்பு மற்றும் தண்ணீர், சானிட்டைசர் போன்ற வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் ஒரு படிவம் கொடுத்து, அதில் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க விருப்பமா? விருப்பமில்லையா? என்பது குறித்த கருத்துக்களை எழுதி தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அதேபோல் பெற்றோரும் எழுதிக்கொடுத்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. சில பள்ளிகளில் பெற்றோரிடம் மாணவ- மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப விருப்பமா? விருப்பமில்லையா? என்பது குறித்த கடிதம் எழுதி வாங்கினர்.

குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமன், மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளிகள், தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில் வடசேரி மேல்நிலைப்பள்ளி, எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, கோட்டார் டி.வி.டி. மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டங்களில் பங்கேற்று ஆய்வு செய்தார்.

அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று காலையில் நடந்தது. இதில் பெரும்பான்மையான பெற்றோர் பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் செல்வராயர், தலைமை ஆசிரியை மைக்கிள் தெரசா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

ஆவரைகுளம் பாலையா மார்த்தாண்டம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜா தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள், மாவட்ட கல்வி அலுவலக துணை ஆய்வாளர் மகாராஜன், வட்டார வளமைய பயிற்றுனர் லலிதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளிகள் திறக்கலாமா? என்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

Next Story