சொத்துக்களை அபகரித்து கொண்டு வயதான தாயை வீட்டைவிட்டு விரட்டிய அரசு ஊழியர்கள்


சொத்துக்களை அபகரித்து கொண்டு வயதான தாயை வீட்டைவிட்டு விரட்டிய அரசு ஊழியர்கள்
x
தினத்தந்தி 11 Nov 2020 12:31 AM IST (Updated: 11 Nov 2020 12:31 AM IST)
t-max-icont-min-icon

சொத்துக்களை அபகரித்துக் கொண்டு வயதான தாயை மகன்களாகிய அரசு ஊழியர்கள் வீட்டைவிட்டு விரட்டிய சம்பவம் நடந்துள்ளது. அந்த மூதாட்டியை போலீசார் மீட்டு அனாதை இல்லத்தில் சேர்த்தனர்.

ராய்ச்சூர், 

ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த இல்லத்திற்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அந்த மூதாட்டி தனக்கு யாரும் இல்லை என்றும், தான் ஒரு அனாதை என்றும் கூறினார். அவரைப் பார்த்து பரிதாபம் அடைந்த இல்ல நிர்வாகிகள் உடனே அவரை இல்லத்தில் சேர்த்துக் கொண்டனர். அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.

தற்போது அந்த மூதாட்டி ஆதரவற்றோர் இல்லத்தில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் போலீசார் அந்த மூதாட்டி குறித்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது அந்த மூதாட்டியின் பெயர் சாவித்திரியம்மா. அவரது சொந்த ஊர் பாகல்கோட்டை மாவட்டம் ஆகும். அவருக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். அதில் 4 பேர் அரசு வேலையில் உள்ளனர். மேலும் அந்த மூதாட்டியின் பேரக்குழந்தைகளும் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள்.

வீட்டைவிட்டு விரட்டினர்

இந்த நிலையில் மூதாட்டியின் பெயரில் உள்ள சொத்துக்களை பகிர்ந்து கொடுக்கும்படி அவரது மகன்களும், மகள்களும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அதையடுத்து தன் பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களை தனது மகன்கள் மற்றும் மகள்களுக்கு சாவித்திரியம்மா பகிர்ந்து கொடுத்துள்ளார். தன் வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் எடுத்து அவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளார். சொத்துக்களையும், பணத்தையும் அபகரித்துக் கொண்ட மகன்களும், மகள்களும் தங்களது தாயை கண்டு கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டிவிட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் வீட்டைவிட்டு விரட்டப்பட்ட மூதாட்டி சாவித்திரியம்மா உப்பள்ளிக்கு வந்து பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் படுத்து தூங்கி உள்ளார். அப்போதுதான் அவரை போலீசார் மீட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த மூதாட்டியின் மகன்கள் மற்றும் மகள்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Next Story