கீழ்வேளூர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.56 ஆயிரம் பறிமுதல்
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.56 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிக்கல்,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாலை அலுவலர்கள் பணியில் இருந்தனர். அப்போது தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் நாகை லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், அருள்பிரியா, மற்றும் 10-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மாலை 4.30 மணி அளவில் 2 ஜீப்களில் வந்தனர்.
பின்னர் அவர்கள் ஜீப்பை விட்டு இறங்கி அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். உடனே அந்த அலுவலகத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. அப்போது பணியில் இருந்த ஊழியர்களின் செல்போன்கள் அனைத்தையும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினர்.
ஊழியர்கள் யாரையும் அலுவலகத்தில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் தங்களது சோதனையை தொடங்கினர். பணியில் இருந்த அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தனர். மாலை 6.45 மணி வரையில் தொடர்ந்து 2 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. அப்போது கணக்கில் வராத ரூ.56 ஆயிரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், இது வழக்கமான சோதனை தான். இருந்தாலும் ரகசிய தகவல் வந்ததன் அடிப்படையில் திடீர் சோதனை நடைபெற்றது என்று கூறினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாக என்ஜினீயர் ஒருவரும், மேற்பார்வையாளர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story