முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு காவல்கிணறில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு காவல்கிணறில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 11 Nov 2020 5:05 AM IST (Updated: 11 Nov 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறு விலக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நெல்லை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொரோனா தொற்றுநோய் குறித்த ஆய்வு பணியில் நேற்று ஈடுபட்டார். இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு நேற்று காலை வந்தார். அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் சென்றார்.

நாகர்கோவில் சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறு விலக்கில் அ.தி.மு.க.வினர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமையில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்பதுரை எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, அகில உலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம் (வள்ளியூர்), அந்தோணி அமல்ராஜா (ராதாபுரம்), அரசு வக்கீல் பழனிசங்கர், பணகுடி ஜெயலலிதா பேரவை பொருளாளர் ஜெகன், நிர்வாகிகள் ஞானபுனிதா, கே.பி.கே.செல்வராஜ், டிம்பர் செல்வராஜ், கூட்டுறவு சங்க தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவிகளுக்கு பாராட்டு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீளம் தாண்டுதல் போட்டியில் சாதனை படைத்த மாணவி பபிஷா மற்றும் பிரியங்கா ஆகியோரை பாராட்டினார். நிகழ்ச்சியில் வள்ளியூரை சேர்ந்த சின்ன பொண்ணு என்ற மூதாட்டி முதல்-அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி காவல்கிணறு பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்தப்பகுதி முழுவதும் வாழை மரங்கள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் விவசாய பொருட்களான வாழைக்குலை, தேங்காய், இளநீர், பாக்கு குலை ஆகியவற்றால் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. வள்ளியூரில் இருந்து காவல்கிணறு வரை நான்கு வழி சாலையில் இருபுறமும் முதல்-அமைச்சரை வரவேற்று வரவேற்பு பதாகைகளும், அ.தி.மு.க. கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியின்போது, ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் பேனர் வைத்திருந்தனர். மேலும் முதல்-அமைச்சரை வாழ்த்தி கோஷங்கள் போட்டனர்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரான்சிஸ், உதயசூரியன் ஆகியோர் கண்காணிப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நம்பர்-1 தொகுதி

முன்னதாக அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. பேசியதாவது:-

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி இந்த ஆட்சியில் நம்பர்-1 தொகுதியாக உள்ளது. இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். ராதாபுரம் கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வர வேண்டும். இந்த பகுதி செழிப்பான பூமியாக மாறவேண்டும் என்று காமராஜர் கனவு கண்டார். இதற்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று காமராஜர் நினைத்தார். அந்த திட்டத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ராதாபுரம் கால்வாய்க்கு பழைய ஆற்றில் இருந்து பம்பிங் மூலம் தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்ற ஆய்வு செய்து வருகிறார். காமராஜர் வழியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

நதிநீர் இணைப்பு திட்டம்

மேலும் நதிநீர் இணைப்பு திட்டம் 4-ம் கட்ட பணி நடந்து வருகிறது. திசையன்விளை தாலுகா அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அ.திருமலாபுரத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கருங்குளத்தில் புதிய நீர்த்தேக்க திட்டம் அமைக்கப்பட உள்ளது. வள்ளியூரில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்படி எல்லா திட்டங்களும் ராதாபுரம் தொகுதிக்கு கிடைப்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூலக்காரணமாக இருந்து வருகிறார். இதற்காக அவருக்கு இங்கு விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story