திருவையாறு அருகே, ஆசிரியர் வீட்டில் நகை திருடிய அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் கைது - 32½ பவுன் நகைகள் பறிமுதல்


திருவையாறு அருகே, ஆசிரியர் வீட்டில் நகை திருடிய அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் கைது - 32½ பவுன் நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Nov 2020 3:45 AM IST (Updated: 11 Nov 2020 7:04 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருடிய அண்ணன்- தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 32½ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கோதண்டராமன் நகரை சேர்ந்தவர் சுதாகர்(வயது40). ஆசிரியர். சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமிகள் பீரோக்களை உடைத்து 42 பவுன் நகைகளை திருடி சென்றனர். இது குறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் திருவையாறு திருமஞ்சன வீதியை சேர்ந்த மார்ட்டின்பிரபுராஜ்(31) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அவரும், அவரது அண்ணன் ஜான்பிரபுராஜ்(47), திருவையாறு மேலவீதி மெயின் ரோட்டை சேர்ந்த சரவணக்குமார்(31), திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தனமணி நகர் துரைசாமி புரத்தை சேர்ந்த தேவா(40) ஆகிய 4 பேரும் சேர்ந்து ஆசிரியர் வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்கள் உருக்கி வைத்திருந்த 32½ பவுன் நகையை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story