பனியன் நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த திருச்சி வக்கீல் உள்பட 3 பேர் கைது - 53 பவுன் நகை மீட்பு


பனியன் நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த திருச்சி வக்கீல் உள்பட 3 பேர் கைது - 53 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 11 Nov 2020 3:45 AM IST (Updated: 11 Nov 2020 7:14 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் 80 பவுன் நகை, ரூ.12¼ லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வக்கீல் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 53 பவுன் நகை மீட்கப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). பனியன் நிறுவன உரிமையாளர். இவருக்கு மனைவி மற்றும் மகள், மகன் உள்ளனர். சென்னையில் உள்ள மகனை பார்க்க சீனிவாசனின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கடந்த 30-ந் தேதி சென்னைக்கு சென்றுவிட்டனர். இதனால் சீனிவாசன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதற்கிடையே கடந்த 1-ந் தேதி காலை சீனிவாசன் நடைபயிற்சிக்காக வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

அப்போது அங்கு வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 80 பவுன் நகை மற்றும் ரூ.12¼ லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தினர். கொள்ளை போன வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அந்த காரை ஆய்வு செய்த போலீசார், அதன் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

அதன்படி திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்த வக்கீலான மனோஜ்குமார் (34) என்பவர் இந்த வாடகை காரை திருச்சியில் இருந்து திருப்பூருக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சீனிவாசனின் வீட்டு அருகே வசிக்கும் வேன் டிரைவரான அண்ணாமலை (32) சீனிவாசனிடம் பணம் அதிகமாக இருப்பதால், அதை கொள்ளையடிக்க அவரது நண்பரான திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்த ஆம்புலன்சு டிரைவரான மணிகண்டன் (35) மற்றும் நாகராஜன், ஸ்டீபன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு மனோஜ்குமார் திட்டம் தீட்டி கொடுத்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வக்கீல் மனோஜ்குமார் மற்றும் மணிகண்டன், அண்ணாமலை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 53 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். மேலும், கொள்ளை வழக்கில் தொடர்புடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய நாகராஜ் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Story