ஆண்டிமடம் அருகே, வீட்டில் தூங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியரின் மனைவியிடம் 8 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ஆண்டிமடம் அருகே வீட்டில் தூங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியரின் மனைவியிடம் 8 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சந்திரா(வயது 68) என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். மகன் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் ராமலிங்கம், சந்திரா ஆகியோர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதில் ராமலிங்கம் நள்ளிரவில் எழுந்து சிறுநீர் கழிப்பதற்காக தோட்டத்து கதவை திறந்து வெளியில் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே சென்று சந்திரா கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த சந்திரா திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அங்கு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சந்திரா, தன் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்சங்கிலி அறுபதாம் கல்யாணத்திற்கு கட்டிய தாலி, முன்னதாக கட்டிய தாலி உள்பட 8 பவுன் எடை இருக்கும் என்று போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story