வெள்ளகோவில் அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன்னாலான அம்மன் சிலை கொள்ளை - மர்ம ஆசாமிகள் கைவரிசை


வெள்ளகோவில் அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன்னாலான அம்மன் சிலை கொள்ளை - மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 11 Nov 2020 3:30 AM IST (Updated: 11 Nov 2020 8:24 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் அருகே கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த ஐம்பொன்னாலான அம்மன் சிலையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

வெள்ளகோவில், 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே காடையூரான் வலசு இரட்டை கிணறு என்ற இடத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஒரு சமூகத்தினருக்கு சொந்தமானது. இந்த கோவில் கருவறையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கற்சிலை உள்ளது. அதன் அருகில் 6 கிலோ எடை கொண்ட 100 ஆண்டு பழமையான ஐம்பொன் சிலை வைக்கப்பட்டிருந்தது.

இந்த கோவில் தினமும் காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை அம்மனுக்கு பூஜை நடைபெறும். அதன்பின்னர் கோவில் பூட்டப்படும். மேலும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். இந்த கோவிலுக்கு வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜை நடந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு கோவில் நிர்வாகி மாணிக்கம் மற்றும் கதிர்வேல் ஆகியோர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை 5 மணிக்கு கோவிலை சுத்தம் செய்ய ரங்கசாமி என்பவர் வந்தார். அப்போது கோவிலின் பின்புறம் இருந்த கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கருவறைக்கு சென்று பார்த்தார். அங்கு கருவறை கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. கருவறையில் இருந்த அங்காளபரமேஸ்வரி அம்மன் ஐம்பொன் சிலையை காணவில்லை. சிலையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதனால் பதற்றம் அடைந்த அவர் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகிகள் கோவிலுக்கு வந்து பார்த்து விட்டு, வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த கோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவிலின் கீழ்புறம் ஐம்பொன் சிலை மீது போர்த்தப்பட்டு இருந்த துணி மற்றும் உடைக்கப்பட்ட கருவறை பூட்டு ஆகியவை கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் கோவில் கருவறை பூட்டை உடைக்க பயன்படுத்திய சூலாயுதத்தை அங்கிருந்த விநாயகர் சிலை முன்பு மர்ம ஆசாமிகள் போட்டு சென்றுள்ளனர். அந்த சூலாயுதத்தையும் போலீசார் எடுத்தனர்.

விசாரணையில் நள்ளிரவு நேரம் கோவில் பின்புறத்தில் உள்ள கிரில் கேட் பூட்டை உடைத்து கோவிலுக்குள் மர்ம ஆசாமிகள் சென்றுள்ளனர். பின்னர் சூலாயுதத்தால் கருவறை பூட்டை உடைத்து கருவறைக்குள் சென்று அங்கிருந்த 6 கிலோ எடை கொண்ட அங்காளபரமேஸ்வரி அம்மன் ஐம்பொன் சிலையை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து கைரேகை குழுவை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் கோவிலுக்கு வந்து கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புகழ் பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் அம்மன் ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story