உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு மிரட்டல்: மதுரையில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது


உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு மிரட்டல்: மதுரையில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
x
தினத்தந்தி 11 Nov 2020 3:30 AM IST (Updated: 11 Nov 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் உணவு பாதுகாப்பு அதிகாரியை மிரட்டிய போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார்.

மதுரை,

மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக இருப்பவர் டாக்டர் சோமசுந்தரம் (வயது 45). இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களாக ஒருவர் பேசி வந்துள்ளார். அவர், தன்னை சென்னையில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், தனது பெயர் செந்தில்குமார் என்றும் அறிமுகம் செய்து கொண்டார். மேலும் அவர் மதுரை மாவட்டத்தில் கொரோனா நிலவரம் குறித்து விசாரிப்பதற்காக உங்களிடம் பேசுகிறேன் என்று கூறி அவரிடம் பல முறை பேசியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி செந்தில்குமார் மதுரை வந்து, சோமசுந்தரத்தை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர், நான் மதுரைக்கு வந்துள்ளதால் தங்குவதற்கும், வெளியே சென்று வர காருக்கும் ஏற்பாடு செய்யும் படி கூறியுள்ளார். உடனே அவர் அருகில் உள்ள விடுதியில் அறை ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் செந்தில்குமார், நான் வெளியே தங்கக்கூடாது என்றும், உங்கள் வீட்டிலேயே தங்கிக்கொள்கிறேன் என்று கூறி அங்கு தங்கியுள்ளார். வீட்டில் இருக்கும் போது அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த சோமசுந்தரம், சென்னையில் செந்தில்குமார் பணியாற்றுவதாக கூறும் அலுவலகத்தில் விசாரித்துள்ளார். அப்போது அங்குள்ளவர்கள் அப்படி ஒரு அதிகாரி பணியாற்ற வில்லை என்று தெரிவித்துள்ளனர்.

உடனே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சோமசுந்தரம் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் செந்தில்குமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், முக்கிய பிரமுகருக்கு தூரத்து உறவினர் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்து, அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் மதுரை மாவட்டம் சோழவந்தான் வெள்ளாளர் தெருவை சேர்ந்த நல்லதம்பி மகன் செந்தில்குமார்(37) என்பதும், இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வந்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து கால்நடை மருத்துவருக்கான அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது, “கைதான செந்தில்குமார், ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி சோமசுந்தரத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. அது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் செந்தில்குமார் வேறு யாரிடமும் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story