தொடரும் கடல் சீற்றம்: பாம்பன் பாலத்தில் மோதி நிற்கும் மிதவையை மீட்பதில் சிக்கல் - ரெயிலை இயக்க முடிவு
பாம்பன் பகுதியில் கடல் சீற்றம் தொடருவதால், பாம்பன் பாலத்தில் மோதி நிற்கும் மிதவையை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது. ஆனாலும், பாலத்தின் மீது ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரெயில் பாலம் அருகே ரூ.250 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பாம்பன் ரெயில் பாலம் அருகே 5-க்கும் மேற்பட்ட இரும்பு மிதவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
அந்த மிதவையின் மீது கடலில் தூண்கள் அமைக்க பயன்படும் நவீன எந்திரங்கள், உபகரணங்களை தூக்க வசதியாக கிரேன், ஜெனரேட்டர் உள்ளிட்டவை அந்த மிதவையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பாம்பன் கடல் பகுதி சீற்றமாக இருப்பதால், அலைகளின் வேகத்தால் ராட்சத கிரேனுடன் கூடிய இரும்பினால் ஆன மிதவை இழுத்து வரப்பட்டு நேற்று முன்தினம் இரவு ரெயில் பால தூணின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பாலம் சேதமாகி இருக்கும் என கருதி ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்ல இருந்த சேது எக்ஸ்பிரஸ், பாலத்தின் நுழைவு பகுதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரெயில் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ராமேசுவரம் கொண்டு செல்லப்பட்டு பயணிகள் இறங்கிவிடப்பட்டனர்.
பாம்பன் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதுடன், கடல் சீற்றமாக காணப்படுவதால் ரெயில் பாலத்தில் மோதிய ராட்சத மிதவையை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் 2-வது நாளாக நேற்றும் மிதவை மீட்கப்படாமல் ரெயில் பாலத்தின் தூண்களில் மோதிய நிலையிலேயே இருந்தது. மிதவை மோதியதால் பாலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய தனியாக என்ஜினை இயக்கியும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
மேலும் சென்னையில் இருந்து நேற்று ராமேசுவரத்திற்கு வந்த சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகள் அனைவரும் மண்டபம் ரெயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து 16 பெட்டிகளுடன் அந்த ரெயிலானது வழக்கம்போல் பாம்பன் ரெயில் பாலம் வழியாக இயக்கப்பட்டு, ராமேசுவரத்திற்கு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு வந்தடைந்தது. இதனிடையே ரெயில் பாலத்தின் தூண் மீது மோதிநின்ற மிதவையை நேற்று ஆர்.வி.என்.எல். துணை மேலாளர் சீனிவாசன் மற்றும் தெற்கு ரெயில்வே பொறியாளர் குழுவினர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாம்பன் ரெயில் பாலத்தில் மிதவை மோதியதில் பாலத்தின் தூண்களுக்கு மற்றும் இரும்பு கார்டர், ரெயில் தண்டவாளங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. பாம்பன் கடல் சீற்றமாக இருப்பதால் பாலத்தின் மீது மோதிய அந்த மிதவையை தற்போது மீட்க முடியவில்லை. காற்றின் வேகம் மற்றும் கடல் அலைகளின் வேகம் குறைந்த பின்னர் மிதவை மீட்கப்பட்டு பாதுகாப்பாக கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும். ரெயில் பாலத்தில் பாதிப்பு இல்லாததால் வழக்கம்போல் பயணிகளுடன் ரெயிலை இயக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.
Related Tags :
Next Story