சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி: போலீஸ் நிலைய மரணம் ஜனநாயகத்துக்கு எதிரானது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து


சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி: போலீஸ் நிலைய மரணம் ஜனநாயகத்துக்கு எதிரானது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
x
தினத்தந்தி 11 Nov 2020 9:36 AM IST (Updated: 11 Nov 2020 9:36 AM IST)
t-max-icont-min-icon

“போலீஸ் நிலைய மரணம் ஜனநாயகத்துக்கு எதிரானது” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 பேர் கைதானார்கள். இவர்களில் பால்துரை என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு பலியானார். மீதமுள்ள 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து, மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சாத்தான்குளம் தந்தை-மகன் கொலையில் மனுதாரர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். சம்பவத்தில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டராக இவர் இருப்பதால் ஜாமீனில் வெளியே வந்தால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும், என்று சி.பி.ஐ. வக்கீல் வாதாடினார்.

விசாரணை முடிவில், மனுதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி, “நாட்டிலேயே தமிழகத்தில்தான் விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்கள் இறப்பது அதிக அளவில் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை தடுக்க வேண்டும். போலீஸ் நிலைய மரணம் என்பது மனிதத்தன்மையற்ற செயல். ஜனநாயகத்துக்கு எதிரானது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அவை முறையாக செயல்படுகின்றனவா? என அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறும் போலீஸ்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.

மேலும் “போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க வருபவர்களின் உரிமைகள் குறித்து ஒவ்வொரு போலீஸ்நிலையத்தின் முன்பகுதியில் அறிவிப்பு பலகை வைத்து, அதில் மக்களின் உரிமைகள் பற்றிய தகவல்களை இடம் பெறச்செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு, இந்த உத்தரவு குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கையை டி.ஜி.பி. அனுப்பி வைக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story