அருப்புக்கோட்டையில், பெண்ணை கட்டிப்போட்டு 30 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு


அருப்புக்கோட்டையில், பெண்ணை கட்டிப்போட்டு 30 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Nov 2020 10:30 PM GMT (Updated: 11 Nov 2020 4:22 AM GMT)

அருப்புக்கோட்டையில் பெண்ணை கட்டிப்போட்டு 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காந்திநகர் அய்யப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர் அருப்புக்கோட்டை - திருச்சுழி சாலையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயபிரபா (வயது 33). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்தநிலையில் நேற்று இரவு 9 மணிக்கு ஜெயபிரபா வீட்டில் தனது குழந்தைகளுடன் இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 4 பேர் ராம்குமாரின் பெயரை சொல்லி கூப்பிட்டனர்.

உடனே ஜெயபிரபா வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அவர்கள் ஜெயபிரபாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டுக்குள் அழைத்து சென்றனர்.

பின்னர் அவரது வாயை பேண்டேஜ் மூலம் கட்டினர். இதையும் மீறி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது.

மேலும் அவர்களது குழந்தைகள் 2 பேரையும் கத்தியை காட்டி சத்தம் போட கூடாது என மிரட்டினர். பின்னர் ஜெயபிரபா கழுத்தில் இருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துக்கொண்டு வீட்டிற்குள் அவர்கள் 3 பேரையும் வைத்து கதவை பூட்டி விட்டு அங்கிருந்து மர்மநபர்கள் தலைமறைவாகி விட்டனர்.

அவர்கள் சென்றவுடன் குழந்தைகள் சத்தம் போட்டனர். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது, ஜெயபிரபா வாய் கட்டப்பட்டு இருந்ததும், வீட்டில் உள்ள நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அருப்புக்கோட்டை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாளும் சம்பவ இடத்திற்கு வந்தார். இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story
  • chat