தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், பட்டாசுகளை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம் - குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், பட்டாசுகளை வாங்க விழுப்புரம் நகரில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம்,
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் முன்கூட்டியே தயாராகி விட்டனர். அதற்கேற்ப புத்தாடைகள் வாங்குவதற்காக ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் விழுப்புரம் நகரில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள் நிறைந்த விழுப்புரம் நேருஜி சாலை, எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, கே.கே.சாலை, திரு.வி.க. சாலை, திருச்சி மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று தீபாவளியை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர். முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே புதிய துணிமணிகள், பட்டாசுகள் மற்றும் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அந்தந்த கடை உரிமையாளர்களுக்கு ஏற்கனவே போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி பொதுமக்கள் முக கவசம் அணிந்தபடி கடைவீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால் இவர்கள் சமூக இடைவெளியை மறந்து செல்வதால் தற்போது குறைந்து வருகிற கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகமாக பரவுவதற்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
இவ்வாறு கடைவீதிகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே வரும் பொதுமக்களால் விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கூடுதலாக போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் சீரான வேகத்தில் சென்று வருவதை காண முடிகிறது.
மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்ட நேரிடும். எனவே நகை பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் முற்றிலும் தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் கூட்டத்தை கண்காணிக்கும் வகையிலும் விழுப்புரம் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளான விழுப்புரம் வீரவாழியம்மன் கோவில், பழைய பஸ் நிலையம், காமராஜர் சாலை, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார், கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து அதிலிருந்தபடியே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி போக்குவரத்தையும் சரிசெய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story