போலீஸ் சிறுவர் மன்றத்தில் நூலகம் திறப்பு: ‘சாதனையாளர்களாக உருவாக புத்தகங்களை வாசியுங்கள்’ டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுரை
‘சாதனையாளர்களாக உருவாக புத்தகங்களை வாசியுங்கள்‘ என்று போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தேனி,
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள தலா 10 போலீஸ் சிறுவர் மன்றங்கள் (போலீஸ் பாய்ஸ் கிளப்), பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புத்துயிர் பெற்று மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த சிறுவர் மன்றங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு வழிகாட்டவும், அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி, வாசிப்பு பழக்கத்தை உருவாக்கவும் சிறுவர் நூலகங்கள் அமைக்க திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவிட்டார். அதன்பேரில், நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட போலீஸ் சிறுவர் மன்றம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு போலீஸ் துறை சார்பில் சிறுவர்களுக்கான நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமை தாங்கினார். தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் வரவேற்றார்.
விழாவில் போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நூலகத்தில் சிறுவர், சிறுமிகள் படிப்பதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
போலீஸ் சிறுவர் மன்றங்களில் தொடங்கி உள்ள நூலகங்கள் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு பேருதவியாக திகழும். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் சிறுவர்களை சாதனையாளராக உருவாக்கும். சிறு வயதிலேயே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் அவர்கள் அப்துல்கலாம் போல் மிகப்பெரிய சாதனையாளர்களாக உருவாகி விடுவார்கள்.
சிறுவர்கள், இந்த மன்றங்களை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாலை நேரங்களில் இந்த மன்றங்களுக்கு வந்து தங்களின் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட வேண்டும். தினமும் ஏதாவது ஒரு தலைவர்களை பற்றியோ, கண்டுபிடிப்புகளை பற்றியோ, வரலாற்று நிகழ்வுகளை பற்றியோ தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக தான் தமிழகத்திற்கு முன்னோடியாக தேனியில், சிறுவர்களுக்கான நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது.
இன்றைய குழந்தைகள் தான் எதிர்கால தலைவர்கள். இந்த சமூகம் அவர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் சமூகத்திற்கு நன்மை செய்யும் நபராக உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கிய குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டிச்செல்வம் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு தீபாவளி பரிசாக புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார். பின்னர், அவர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கரன், ராஜேந்திரன் மற்றும் துணை சூப்பிரண்டுகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story