தீபாவளியன்று அரசு அனுமதித்த நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்


தீபாவளியன்று அரசு அனுமதித்த நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 11 Nov 2020 11:55 AM GMT (Updated: 11 Nov 2020 11:55 AM GMT)

அரசு அனுமதித்த நேரத்தில் பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது.

திருப்பத்தூர், 

தீபாவளி திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தற்காலிக செவிட்டுத் தன்மையையும், நிரந்தரமான செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதிக ஒலி மற்றும் ஒலியுடன் கூடிய பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுவை தடுக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதித்துள்ளது. எனவே சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடித்தல் வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதையும், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆகவே மக்கள் அனைவரும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து விபத்து மற்றும் மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
  • chat