வேலூர் மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள், அருங்காட்சியகம், பூங்கா திறப்பு
வேலூர் மாவட்டத்தில் 8 மாதங்களுக்கு பின்னர் சினிமா தியேட்டர்கள், அருங்காட்சியகம், பூங்காக்கள் திறக்கப்பட்டன. முதல்நாளில் குறைந்தளவு மக்களே சினிமா, அருங்காட்சியத்தை பார்வையிட்டனர்.
வேலூர்,
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், பூங்கா, அருங்காட்சியகம், விளையாட்டு அரங்குகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்காரணமாக ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சினிமா தியேட்டர்கள், பூங்காங்கள், அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதைத்தொடர்ந்து தியேட்டர்கள், அருங்காட்சியகத்தை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. தியேட்டரில் கிருமிநாசினி தெளித்து 50 சதவீதம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அருங்காட்சியகத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொதுமக்கள் பார்வையிட வட்டம் வரையப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் நேற்று வேலூர் மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. தீபாவளியையொட்டி புதிய படங்கள் வெளியாகாத காரணத்தாலும், மீண்டும் தியேட்டர் திறக்கப்படும் முதல்நாள் செவ்வாய்கிழமை என்பதாலும் வேலூர், காட்பாடியில் பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. காட்பாடி சில்க்மில் அருகே உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் மட்டும் பழைய படம் திரையிடப்பட்டது. சினிமா பிரியர்கள் பலர் பல மாதங்களுக்கு பின்னர் தியேட்டரில் படம் காணும் ஆர்வத்தில் வருகை தந்தனர். தியேட்டர் நுழைவு வாயிலில் பார்வையாளர்களின் உடல்வெப்பம் தெர்மல்கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
அனைவரும் கைகளை கழுவவும், கிருமிநாசினியால் கைகளை சுத்தப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர். முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டனர். பல மாதங்களுக்கு பின்னர் தியேட்டருக்கு வந்த பெண்கள் பலர் உற்சாகமாக செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். முதல்நாளில் வழக்கத்தைவிட குறைந்தளவு நபர்களே வருகை புரிந்தனர். இன்று (புதன்கிழமை) முதல் அனைத்து தியேட்டர்களும் திறக்கப்படும் என்றும், ஏற்கனவே திரையிடப்பட்டு நன்றாக வசூல் செய்த தமிழ், ஆங்கில, இந்தி, தெலுங்கு படங்களை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம் காலை 9.30 முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. உடல்நிலை பரிசோதனைக்கு பின்னரே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். தெர்மல்கருவியில் ஆரஞ்சு நிறம் காட்டியதால் பெண் ஒருவர் மற்றும் 10 வயதுக்கு குறைவான சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அருங்காட்சியத்தில் காணப்பட்ட நடுகற்கள், கலைப்பொருட்களை காப்பாட்சியர் சரவணன் விளக்கி கூறினார். முதல்நாளில் 141 பேர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
இதேபோன்று வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள பெரியார் பூங்காவில் மாலை 4 மணி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். கோட்டையின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள பூங்காவிற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
Related Tags :
Next Story