கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டது: 7 மாதங்களுக்கு பிறகு கோவையில் தியேட்டர்கள் திறப்பு - காந்தி பூங்கா, அருங்காட்சியகத்துக்கும் அனுமதி

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட தியேட்டர்கள், காந்தி பூங்கா, அருங்காட்சியகங்கள் 7 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டன.
கோவை,
கொரோனாவின் பிடியில் இருந்து பொதுமக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதியில் இருந்து முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கிப்போனது. கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் இருந்து பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, முடங்கிய தொழில்கள் புத்துயிர்பெற்று வருகின்றன.
ஆனால் முழு ஊரடங்கு அறிவிக்கும் முன்பே கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. ஒவ்வொரு மாதமும் தளர்வுகள் அறிவிக்கும்போது தியேட்டர்கள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்தநிலையில் இந்த மாதம் தளர்வின்போது 10-ந் தேதி முதல் பல்வேறு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள், பெரிய பூங்காக்கள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.
அதன்படி கோவை மாவட்டத்தில் நேற்று தியேட்டர்கள் திறக்கப்பட்டன. முன்னதாக தியேட்டர்களின் உள்ளேயும், வெளியேயும் கிரிமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து படம் பார்க்க வந்தவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பம் கணக்கிடப்பட்டு, கைகளில் கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன் இருக்கைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக ஒரு இருக்கை விட்டு மற்றொரு இருக்கையில் அமரும் வகையில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. கடந்த 7 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டதால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் ஆர்வத்துடன் பணிக்கு வந்து இருந்தனர். அதே சமயம் புதிய படங்கள் எதுவும் வெளியாகாததால் திறந்து இருந்த ஒரு சில தியேட்டர்களில் பழைய படங்களான சாமி உள்பட பல்வேறு படங்களை திரையிட்டனர். அத்துடன் மால்களில் உள்ள தியேட்டர்களில் கொரோனா விழிப்புணர்வு குறித்த படம் திரையிடப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:-
கோவை மாநகரில் 40 தியேட்டர்களும், புறநகரில் 20 தியேட்டர்களும் உள்ளன. இதுதவிர மால்களில் பல தியேட்டர்கள் உள்ளன. கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்பாகவே கடந்த மார்ச் மாதம் 17--ந்தேதியில் இருந்து அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. தற்போது தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்ததால் தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் முதல்நாளான நேற்று 10 சதவீத அளவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகை முதல் புதிய படங்கள் வெளியாவதால் மீதமுள்ள அனைத்து தியேட்டர்களும் திறக்கப்படும். படம் பார்க்க வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட் எடுக்க வருபவர்கள், பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு மட்டுமே உள்ளே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். தியேட்டர் உணவுக்கூடங்களில் பணியாற்றுபவர்கள் கட்டாயணம் தலையுறை, கையுறை, முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தியேட்டரில் குளிர்சாதன வசதியை பொறுத்தவரையில் அரசு வழிகாட்டுதலில் கூறப்பட்ட அளவான 26 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் படி செயல்படும். ஒரு நாளைக்கு வழக்கம்போல் காலை 11 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி, 9.30 மணி என 4 காட்சிகள் திரையிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோன்று கோவை காந்திபார்க்கில் உள்ள காந்தி பூங்கா நேற்று திறக்கப்பட்டது. இதனால் நேற்று இங்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் நடைபயிற்சி மேற்கொண்டனர். முன்னதாக அங்கு நடைபயிற்சிக்கு வருபவர்களின் உடல் வெப்பம் அளவீடு செய்யப்பட்டது. அத்துடன் முகக்கவசம் அணிந்து வந்தவர்களை மட்டுமே உள்ளே செல்ல மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி அளித்தனர். கைகளை சுத்தம் செய்வதற்காக பூங்காவின் முன்பு கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டு உள்ளது.
காலை 5.30 மணி முதல் 9.30 வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பூங்கா செயல்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதவிர கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா எதிரே உள்ள அரசு அருங்காட்சியகம் நேற்று திறக்கப்பட்டது. கோவையில் தியேட்டர்கள், பூங்காக்கள், அருங்காட்சியகம் உள்ளிட்டவை திறந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதே சமயம் வ.உ.சி. உயிரியல் பூங்கா திறக்க போதிய உத்தரவு வராததால் நேற்று திறக்கப்படவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story